உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் மல்லையாவை நாடு கடத்துவதில் தாமதம் ஏற்பட என்ன காரணம்?

புதுடெல்லி: மல்லையாவை நாடு கடத்துவதில் நிலவும் சிக்கல் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் உள்ள 13 வங்கிகளில் மொத்தம் ரூ.9,000 கோடி கடன் பாக்கி வைத்து விட்டு வெளிநாடு தப்பியோடிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், சட்ட சிக்கல்கள் காரணமாக, அதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மல்லையா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அன்கூர் சைகால்,``மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கை குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவரை நாடு கடத்த எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகான விவரங்கள் தெரியாது,’’ என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான ரஜத் நாயர் கூறுகையில், ``மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும் விவகாரத்தில் சில ரகசிய நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படும் அந்த நடவடிக்கையில் நாங்கள் கூட ஒரு மனுதாரராக இல்லை. எனவே, இங்கிலாந்து அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து எதுவும் தெரியாது” என்று தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள், `மல்லையாவால் எப்போது நீதிமன்றத்தில் ஆஜராக முடியும் என்பது பற்றியும், நாடு கடத்துவது தொடர்பான மறைமுக நடவடிக்கை எப்போது முடியும் என்பது குறித்தும், நவம்பர் 2ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்,’ என மல்லையா தரப்பில் ஆஜரான வக்கீல் சைகாலுக்கு உத்தரவிட்டனர்.

Related Stories:

More