×

`ஹெபடைடிஸ் சி’ வைரஸ் கண்டுபிடிப்பு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு

ஸ்டோக்ஹோம்: இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஹெபடைடிஸ் சி வைரசை கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட 6 துறைகளில் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளை கண்டுபிடித்து, மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்படுகிறது. பரிசு பெறும் ஒவ்வொருவருக்கும், தங்கப்பதக்கம், பட்டயம் மற்றும் பரிசுப் பணம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளை ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் கமிட்டியின் தலைவர் தாமஸ் பெர்ல்மன் நேற்று முதல் அறிவித்து வருகிறார். இதில் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்களை நேற்று அவர் அறிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ், இங்கிலாந்து விஞ்ஞானி மைக்கேல் ஹூட்டன் ஆகியோருக்கு 2020ம் ஆண்டின் மருத்துவ நோபல் பரிசின் மொத்த தொகையான ₹ 8.27 கோடி பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெபடைடிஸ் சி வைரசை அடையாளம் காண இவர்களின் ஆய்வு வழி வகுத்துள்ளது. ஹெபடைடிஸ் சி வைரஸ் மட்டுமே ஹெபடைடிசை ஏற்படுத்தும் என்ற ஆய்வுக்காக அவர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வரலாற்றில் முதல் முறையாக, உலக மக்களிடம் இருந்து ஹெபடைடிஸ் வைரஸ் முற்றிலும் ஒழிக்கப்பட உள்ளது. ஹெபடைடிஸ் வைரசினால் உலகம் முழுவதும் 7 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 லட்சம் பேர் வரை பலியாவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுகிறது. 7ம் தேதி வேதியியல், 8ம் தேதி இலக்கியம், 9ம் தேதி அமைதி, 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Tags : scientists , Distribution of the Nobel Prize in Medicine to 3 scientists for the discovery of the hepatitis C virus
× RELATED திருச்சி தேசிய அறிவியல் மாநாட்டிற்கு...