ஊரடங்கு அமலில் உள்ளதால் அக். 31 வரை மெரினாவில் மக்களுக்கு அனுமதியில்லை: உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்

சென்னை: ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மெரினா கடற்கரையில் அக்டோபர் 31 வரை பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினா கடற்கரையை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் ரமேஷ் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மெரினாவில் 900 கடைகளுக்கு மேல் ஒருவருக்கு கூட அனுமதி தரக்கூடாது. கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட் நகர்வரை செல்லும் பாதையில் உடைந்துபோன பாலத்தை மீண்டும் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். லூப் சாலையில் உள்ள மீன் கடைகளுக்கு இடங்களை உரிய முறையில் ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை சென்னை மாநகராட்சிக்கு வழங்கியது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல்  எஸ்.ஆர்.ராஜகோபால், மெரினா கடற்கரையில் தள்ளுவண்டி கடைகள் அமைப்பது தொடர்பான டெண்டர் இருமுறை திறக்கப்படவில்லை. நவம்பர் 9ம் தேதி இந்த டெண்டர்கள் திறக்கப்படும். கடைகளை அமைக்க மூன்று கம்பெனிகள் டெண்டர் கோரியுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கை அக்டோபர் 31 வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், பூங்காக்கள், கடற்கரைகள், திரையரங்குகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 31 வரை மெரினா கடற்கரையை பொதுமக்களுக்காக திறக்க முடியாது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் கோரியது, மீன் சந்தை திறப்பது, மெரினாவை திறப்பது உள்ளிட்டவை தொடர்பாக நவம்பர் 11ம் தேதிக்குள் சென்னை மாநகராட்சி அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories:

>