×

தங்க கடத்தல் வழக்கில் சொப்னாவுக்கு ஜாமீன்

திருவனந்தபுரம்: தங்கம் கடத்தல் வழக்கில் சொப்னாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட சம்பவத்தில் சொப்னா கும்பலுக்கு எதிராக சுங்க இலாகா தான் முதலில் வழக்கு பதிவு செய்தது. பின்னர் தான் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ மற்றும் மத்திய அமலாக்கத் துறை ஆகியவை வழக்கு பதிவு செய்தன. இந்த மூன்று மத்திய விசாரணைக் குழுக்கள் தொடர்ந்த வழக்குகளில் ஜாமீன் கோரி சொப்னா உள்பட இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் மனுத்தாக்கல் செய்தனர். இதில் சுங்க  இலாகா தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 17 பேரில் 10 பேருக்கு இதுவரை ஜாமீன் கிடைத்தது. ஆனால் சொப்னாவுக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.    

இந்நிலையில் சுங்க இலாகா தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சொப்னா மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், சொப்னாவுக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. ஆனால் என்ஐஏ மற்றும் மத்திய அமலாக்கத்துறை வழக்குகள் இருப்பதால் அவரால் சிறையில் இருந்து தற்போதைக்கு வெளியே வர முடியாது. இதற்கிடையே என்ஐஏ தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிலர் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கம் கடத்தல் வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை உடனடியாக தாக்கல் செய்யவேண்டும். இல்லை என்றால் அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags : Sopna , Sopna granted bail in gold smuggling case
× RELATED கடந்த ஆண்டு தங்க கடத்தலில் ஈடுபட்டதாக...