×

வாடிக்கையாளர்கள் போல் வந்து கடை உரிமையாளரை கத்தியால் வெட்டி செல்போன் கொள்ளை: ரவுடிகள் 2 பேர் கைது

காஞ்சிபுரம்: வாடிக்கையாளர்கள் போல வந்து, கடை உரிமையாளரை கத்தியால் வெட்டி செல்போன், பணத்தை கொள்ளையடித்த 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் அடுத்த வெள்ளைகேட் பகுதியில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும். காஞ்சிபுரம் - திருப்பதி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியாக இருப்பதாலும், எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். காஞ்சிபுரம் - திருப்பதி மாநில நெடுஞ்சாலை சந்திப்பில் செல்போன் விற்பனை, ரீசார்ஜ் செய்யும் கடை, பேக்கரி, பழக்கடைகள் என ஏராளமாக பல்வேறு கடைகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 பேர், அங்குள்ள ஒரு செல்போன் கடைக்கு சென்றனர். அங்கிருந்த கடை உரிமையாளர் ஐயப்பனிடம், செல்போன் உதிரிபாகங்களின் விலையை கேட்டபடி கல்லா பெட்டியை நோட்டமிட்டு விட்டு சென்றனர். பின்னர், அதே 3 பேர், நேற்று முன்தினம் இரவு மீண்டும் கடைக்கு வந்தனர். அங்கு வைக்கப்பட்டு இருந்த செல்போன்களின் விலையை கேட்டு விசாரித்தனர். தொடர்ந்து, அங்கிருந்த அவரது மனைவியை கேலி செய்துள்ளனர். இதனால் அவர்களை, ஐயப்பன் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த 3 பேரும், மறைத்து வைத்திருந்த பட்டாகத்தியை எடுத்து ஐயப்பனின் தலையில் வெட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்து அவரது மனைவி, அலறி கூச்சலிட்டபடி அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் மர்ம நபர்கள், கற்களை எடுத்து கடை மீது வீசி, கடையில் இருந்த செல்போனின் உதிரி பாகங்கள் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 3 செல்போன்களை எடுத்துகொண்டு தப்பினர்.

தகவலறிந்து காஞ்சிபுரம் டிஎஸ்பி மணிமேகலை தலைமையில் 15க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். பின்னர் அப்பகுதி முழுவதும் தீவிரமாக கண்காணித்தனர். சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின், அங்கு புதரில் மறைந்திருந்த 2 பேரை, சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர், அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், சென்னை அடுத்த ஆவடியை சேர்ந்த ரவுடிகள் தங்கராஜ் (18), பட்டாபிராம் குமார் (20) என்றும், ஐயப்பனை அரிவாளால் தாக்கி செல்போனை பறித்து சென்றது தெரிந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், 2 பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய அவர்களது கூட்டாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : rowdies , Cell phone robbery: 2 rowdies arrested
× RELATED கத்துக்குட்டி அண்ணாமலை திருந்த...