நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் ரூ.5 கோடி பொது சொத்துக்களை மீட்க வேண்டும்: தாசில்தாரிடம் கோரிக்கை

கூடுவாஞ்சேரி: நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி டிபன்ஸ் காலனி, வீட்டுமனை பிரிவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ரூ.5 கோடி மதிப்புள்ள பொது சொத்துக்களை மீட்க வேண்டும் என வண்டலூர் தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி 10வது வார்டு டிபன்ஸ் காலனியில், குடியிருப்போர் நலவாழ்வு சங்கம் உள்ளது. இச்சங்க ஆலோசகர் பாரத் ராஜேந்திரன் தலைமையில், சங்க தலைவர் ஜெயானந்தன், செயலாளர் கோவிந்தராஜன், நிர்வாகிகள் அஜ்மீர், பார்த்திபன் உள்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், வண்டலூர் தாசில்தார் செந்திலிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.

டிபன்ஸ் காலனி குடியிருப்போர் நலவாழ்வு சங்கத்துக்கு உட்பட்ட டிபன்ஸ் காலனியில், டிபன்ஸ் சிவிலியன் கோஆப்ரேடிவ் சொசைட்டி மூலம் கடந்த 1985ம் ஆண்டு 16.96 ஏக்கர் நிலத்தில் லேஅவுட் போடப்பட்டது. அந்த வரைபடத்தில் பூங்கா,  குளம், பொது இடம் ஆகியவை பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டது. அதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.5 கோடி. இந்த சொசைட்டியின் பணிகள் முடிந்துவிட்டதால், சொசைட்டி கலைக்கப்பட்டது. கடந்த 2005ம் ஆண்டு கலைக்கப்பட்ட சொசைட்டியின் முகவரியில் போலியாக, ஒரு நபர்  சொசைட்டி தனி அலுவலர் என்ற போர்வையில் பொது நலத்துக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை தனியாருக்கு போலி ஆவணம் மூலம், கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலகத்தில் 2005ம் ஆண்டு பத்திரப்பதிவு செய்துள்ளார். மேலும், அந்த நிலத்தை பல மனைகளாக பிரித்து விற்பனையும் செய்துள்ளனர். தொடர்ந்து, போலியாக பதிவு செய்த பத்திரங்களை கொண்டு, வீடு கட்டுவதற்கு நந்திவரம் -கூடுவாஞ்சேரி பேரூராட்சி நிர்வாகத்தால் கட்டிட வரைபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, நலவாழ்வு சங்கம் சார்பில், பேரூராட்சியில் முறையிட்டும் பயனில்லை. எனவே மேற்கண்ட வீட்டு மனையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>