திருப்பதியில் அரசு மருத்துவமனை மேற்கூரை இடிந்து விழுந்து கொரோனா வார்டில் பணி செய்த கர்ப்பிணி நர்ஸ் பரிதாப சாவு

திருமலை: அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த 6 மாத கர்ப்பிணி நர்ஸ் இறந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனை அருகே பத்மாவதி மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. 8 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வார்டாக மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு ராதிகா என்பவர் ஒப்பந்த முறையில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவர் தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு முதல் வழக்கம்போல் ராதிகா பணியில் ஈடுபட்டு இருந்தார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் ராதிகா மருத்துவமனை நுழைவுவாயில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனையின் நுழைவு வாயில் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் ராதிகாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் கொரோனா நோயாளிகள் 2 பேர் படுகாயமடைந்தனர். திருப்பதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தகவலறிந்த மருத்துவ சுகாதார துறை அமைச்சர் ஆல நானி, உயிரிழந்த நர்ஸ் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியும், படுகாயமடைந்த 2 கொரோனா நோயாளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். விபத்து குறித்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று சிம்ஸ், பத்மாவதி கோவிட் மருத்துவமனை நிர்வாகத்திற்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

* 2 குழந்தைகள் பிறந்து இறந்தன

பலியான ராதிகாவின் கணவர் அரி. இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2 குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டது. தற்போது 3 வது முறையாக ராதிகா கர்ப்பிணியாக இருந்த நிலையில், மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக இறந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>