×

அரசு பேருந்துகள் லாபம் ஈட்ட முடியாதது ஏன்? ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் மேலாண்மை இயக்குநராக பணிபுரிந்து 2015ல் ஓய்வு பெற்ற சுப்பையா, தனக்கு 2009 முதல் 2013 வரையிலான விடுமுறை ஒப்படைப்பு பணம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட நிதி ஆகியவற்றை 18 சதவீத வட்டியுடன் வழங்க உத்தரவிடக்கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் நேற்று விசாரித்தார். போக்குவரத்து கழக வழக்கறிஞர், ‘‘போக்குவரத்து கழகம் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளதால் மனுதாரர் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கும் விடுமுறை ஒப்படைப்பு பணம் வழங்கப்படவில்லை’’ என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் பணப்பலன்களை பெற வீதிக்கு வந்து போராடுகின்றனர். குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகள் லாபம் சம்பாதிக்கும் போது, அரசு போக்குவரத்து கழகத்தால் லாபம் சம்பாதிக்க முடியாதது ஏன்? போக்குவரத்து கழகத்தை லாபகரமாக இயக்க அரசு கொள்கை முடிவு எடுப்பதுடன் தேவைப்பட்டால் சட்டமும் நிறைவேற்றலாம். மனுதாரருக்கு 3 மாதத்தில் விடுமுறை ஒப்படைப்பு பணம் வழங்குவதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, பணப்பலன்களை வழங்க வேண்டும்’’ என உத்தரவில் கூறியுள்ளார்.

Tags : Why are government buses not profitable? Icord Branch Question
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை