×

பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி காதலியை மணந்தார் அதிமுக எம்எல்ஏ பிரபு: கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு (34). இவர் தியாகதுருகத்தில் வசித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த சவுந்தர்யா (20) என்பவரை பிரபு காதலித்து வந்தார். சவுந்தர்யா கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். அதன்படி எம்எல்ஏவின் குடும்பத்தினர் சவுந்தர்யா வீட்டில் சென்று பெண் கேட்டனர். அப்போது அவர்கள் மறுத்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து எம்எல்ஏவுக்கு வேறு பெண்ணை அவரது குடும்பத்தினர் பார்த்துள்ளனர். இதையறிந்த சவுந்தர்யா, பிரபுவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது நான் உங்களைத்தான் காதலிக்கிறேன், என்னைத்தான் நீங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும், உங்களுடன்தான் வாழ்வேன், எனது வீட்டின் அருகில் நிற்கிறேன். நீங்கள் வந்து அழைத்துச் செல்லுங்கள் என்று கூறினாராம்.

இதையடுத்து கடந்த 1ம் தேதி இரவு சவுந்தர்யாவை பிரபு அழைத்து வந்து உறவினர் வீட்டில் தங்க வைத்திருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பெண்ணின் பெற்றோரிடம் எம்எல்ஏ தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து எம்எல்ஏவின் பெற்றோர் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். அதன்படி நேற்று அதிகாலை 5.40 மணி அளவில் எம்எல்ஏவின் வீட்டில் பிரபு- சவுந்தர்யா திருமணம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ குடும்பத்தினர் மற்றும் ஒரு சில நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பெண் வீட்டார் யாரும் வரவில்லை.

மகளை ஆஜர்படுத்தக்கோரி ஐகோர்ட்டில் தந்தை மனு: சவுந்தர்யாவின் தந்தை சுவாமிநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், எனது மகள் சவுந்தர்யாவை கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு ஆசைவார்த்தைகள் கூறி, கடத்தி விட்டார். இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எம்எல்ஏ ஆட்கள் என்னை மிரட்டுகிறார்கள். எனவே எனது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடவேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது

* பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயற்சி
பிரபு எம்எல்ஏ, தனது காதலியை நேற்று காலை திருமணம் செய்து கொண்ட தகவல் அறிந்ததும், பெண்ணின் தந்தை சுவாமிநாதன் குருக்கள் எம்எல்ஏ வீட்டு முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தியாகதுருகம் போலீசார் சுவாமிநாதனை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்து அனுப்பி வைத்தனர். பின்னர், தியாகதுருகம் கிராம நிர்வாக அலுவலர் காயத்ரி கொடுத்த புகாரின்படி தற்கொலைக்கு முயன்றதாக சுவாமிநாதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : MLA ,AIADMK ,Prabhu , AIADMK MLA Prabhu marries girlfriend over housewife protest: Sensation in forgery
× RELATED உளுந்தூர்பேட்டையில் அதிமுக முன்னாள்...