×

அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்காக சென்னை புறநகர் ரயில் சேவை தொடங்கியது: சமூக இடைவெளி, முகக்கவசத்துடன் பயணம்

சென்னை: அத்தியாவசிய பணியில் உள்ளவர்களுக்காக சென்னை புறநகர் ரயில் சேவை நேற்று தொடங்கியது. இதில் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்தே பயணிகள் அனைவரும் பயணம் மேற்கொண்டனர். கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அத்தியாவசிய பணியாளர்களுக்காக அரக்கோணம் முதல் சென்ட்ரல் வரையும் சென்ட்ரல் முதல் அரக்கோணம் வரை 30 ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வந்தது. இதில் கூட்டம் அதிகமாக இருப்பதால் நேற்று முதல் அத்தியாவசிய மற்றும் அரசு பணியாளர்களுக்கு புறநகர் ரயில் சேவை கூடுதலாக இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.

அதன்படி நேற்று கூடுதலாக 12 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்ட மின்சார ரயில் செங்கல்பட்டை சென்றடைந்தது. அதைப்போன்று மறுமார்க்கமாக அங்கிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வந்தடைந்தது. இந்த ரயில்களில் மருத்துவம், மின்சாரம், பால் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணியில் இருப்போர் என்று தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்த பிறகு தான் ரயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.

பின்னர் அவர்களுக்கு உடல் வெப்பநிலை அறியும் சோதனை நடத்தப்பட்ட பிறகு ரயில்களில் செல்ல அனுமதித்தனர். மேலும் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து அனைவரும் நேற்று பயணம் மேற்கொண்டனர். பொதுமக்கள் இந்த ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு குறையும் நிலையில் பொதுமக்களும் பயணிக்க எந்த பிரச்னையும் இல்லை என்று தெரியவந்தால் அரசு அனுமதி கிடைத்ததும் பொதுமக்களும் பயணிக்கும் வகையில் விரைவில் ரயில்கள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai , Chennai suburban train service launched for those in essential work: social space, travel with a mask
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...