இந்தியாவிற்கு விஜய் மல்லையாவை அனுப்ப பிரிட்டன் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து தெரியாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்.!!!

டெல்லி: இந்தியாவிற்கு விஜய் மல்லையாவை  அனுப்ப பிரிட்டன்  அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து தெரியாது என  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. இந்தியாவில் பாரத ஸ்டேட் வங்கி உள்பட பல வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் வாங்கிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, இந்தியாவில் பல வழக்குகள் தொடரப்பட்டன. அதையடுத்து, அவர் கடந்த 2016ம் ஆண்டு  மார்ச் மாதம் லண்டனுக்கு தப்பிச் சென்றார். பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கி வந்த கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான இவர் மீது நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை  நாடு கடத்தி வருவது தொடர்பான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இருப்பினும், தம்மை இந்தியாவுக்கு அனுப்புவதை எதிர்த்து தொழிலதிபர் விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கை லண்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி  செய்தது.

இதற்கிடையே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்று விஜய் மல்லையாவிற்கு எதிரான உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு, கடந்த 31-ம் தேதி விசாரணக்கு வந்தபோது, விஜய் மல்லையா நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி லலீத் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜய் மல்லையா விவகாரம் தொடர்பாக லண்டனின் என்ன நடந்து வருகிறது என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய  அரசு தரப்பில் பதிலளித்த வழக்கறிஞர், விஜய் மல்லையாவை திரும்ப அனுப்பு இங்கிலாந்து அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து தெரியாது என்றும் இது தொடர்பாக பிரிட்டன் அரசு ரகசியம் காப்பதாகவும் தெரிவித்தார். மல்லையா  பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று திரும்ப செலுத்தாததால் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மல்லையாவை இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வர தூதரகம், சட்ட ரீதியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவித்தார். இதனையடுத்து வழக்கின் விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு வழக்கின் விசாரணை  ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories:

More