×

கரையை உயர்த்திக் கட்டியதால் வீணாகும் ஏரி நீர்: 700 ஏக்கர் நிலம் தரிசாகும் அபாயம்

திருச்செங்கோடு: ஏற்காடு மலையில் உற்பத்தியாகும்  திருமணிமுத்தாறு, நாமக்கல் மாவட்டம் வழியாக சுமார் 100 கி.மீ., பயணித்து நன்செய் இடையாறு என்னுமிடத்தில் காவிரியில் கலக்கிறது. இந்த ஆற்றின் உபரி நீரானது, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா பகுதியில் வாய்க்கால் வழியாக ஏரிகளுக்கு திருப்பி விடப்பட்டு, விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த தண்ணீரை நம்பி விவசாயிகள் கரும்பு, நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். திருமணிமுத்தாற்றிலிருந்து வரும் ஆற்றுநீரானது மழை காலங்களில் காட்டாறு வெள்ளமாக பெருக்கெடுத்து பாலமேடு, கோட்டப்பாளையம், பருத்திப்பள்ளி, வண்டிநத்தம் மற்றும் கொன்னையார் ஆகிய 5 ஏரிகளை நிரப்பும்.

கடைசியாக கொன்னையார் ஏரி நிரம்பி மீண்டும் திருமணிமுத்தாறில் கலக்கிறது. பருத்திப்பள்ளி ஏரிக்கரை கடந்த 1941ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இந்த ஏரியில்  கடந்த ஆண்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, மேற்கு கரை கோடியில் இருந்து வண்டிநத்தம் ஏரிக்கு செல்லும் வாய்க்கால் வழித்தடத்தில் கிழக்கு கரையைவிட மேற்கு கரை தடுப்பு சுவர் சுமார் 100 அடி நீளத்திற்கு 1 அடி உயர்த்தப்பட்டது. இதனால், பருத்திப்பள்ளி ஏரியிலிருந்து வண்டிநத்தம் ஏரிக்கு போதிய அளவு தண்ணீர் வருவதில்லை.

கொன்னையார் ஏரிக்கு வரவேண்டிய நீர் தடைபடுவதால், அந்த ஏரி பகுதியில் கருவேல முட்செடிகளும், புதர்களும் மண்டி காணப்படுகிறது. அதிகாரிகளின் திட்டமிடாத அலட்சிய செயலால்,  பருத்திப்பள்ளி ஏரியின் கிழக்கு கரை பகுதியில் நீர் வெளியேறி வாய்க்கால் வழியாக மீண்டும் திருமணி முத்தாற்றிலேயே  நேரடியாக கலந்து விடுகிறது. இதனால், 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொன்னையார் பெரியப்பன் குட்டை ஏரிக்கு வந்து, விவசாயத்திற்கு பயன்பட வேண்டிய நீர் ஆற்றில் வீணாக கலப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 தற்போது, நல்லமழை பெய்துள்ளதால் பருத்திப்பள்ளி ஏரி நிரம்பி கடல்போல் காணப்படுகிறது. ஆனால், உபரிநீரானது வண்டிநத்தம் ஏரிக்கு செல்லாமல் மேற்கு கரை வழியாக வெளியேறி திருமணி முத்தாற்றிலேயே கலப்பதால், கொன்னையார் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சரிந்து வருகிறது. நீர்வரத்தின்றி ஏரி வறண்டு விட்டது. இதனால், அப்பகுதியில் 700 ஏக்கர் விவசாய நிலங்கள் வறண்டு கிடக்கின்றன. இவ்வளவுக்கும் 2017ம் ஆண்டில் தாய் திட்டத்தில் கொன்னையார் ஏரி ₹17.24 லட்சத்தில் மேம்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், நீர் வழித்தடங்கள் நீண்ட காலமாக தூர்வாரப்படாததால் கருவேல மரங்களின் கசப்புத்தன்மை நீரில் ஏறி விடுவதாக கூறப்படுகிறது. நீர் வழித்தடங்கள் பல்வேறு ஆக்கிரமிப்புகளுக்குள்ளாகி உள்ளதாகவும் இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுத்து  கொன்னையார் கிராமத்திற்கான நீராதாரத்தை உறுதி செய்ய வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : land , Shore, raised, built, wasted, lake water
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!