×

50க்கும் அதிகமான காளைகளுடன் அனுமதியின்றி திடீர் ஜல்லிக்கட்டு: மதுரை ரிங்ரோடு பகுதியில் பரபரப்பு

மதுரை : மதுரை கருப்பாயூரணியில் நேற்று திடீரென்று எவ்வித முன் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது. 50க்கும் அதிகமான காளைகள் பங்கேற்றன. நூற்றுக்கணக்கான இளைஞர்களும் கலந்து கொண்டனர். மதுரை, கருப்பாயூரணி ரிங்ரோடு அருகே சுமார் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று மாலை திடீரென்று கூடினர். அவர்கள் தென்னை மர கட்டைகள் மூலம் வாடிவாசல் அமைத்தனர். பொதுவாக இந்த இடத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி கொடுக்கப்படும். பயிற்சியை காண இளைஞர்கள் திரண்டு நிற்பார்கள். அதேபோல, நேற்றும் பயிற்சி நடைபெறும் இடத்தில் இளைஞர்கள் திரண்டு நின்றனர். அப்போது 50க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை வேனில் கொண்டு வந்து இறக்கினர். காளைகள் அனைத்திற்கும் மாலை, துண்டு அணிவித்தும், கலர்பொடிகள் தூவி பொட்டு வைத்து கொண்டு வந்திருந்தனர்.

திடீரென்று ஜல்லிக்கட்டு காளைகள், ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிட்டனர். வாடிவாசல் அருகே நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கூடி நின்று ஜல்லிக்கட்டு காளைகளை பிடித்து அடக்கினர். சில காளைகள் கூட்டத்தில் புகுந்து பலரை முட்டி கீழே தள்ளின. சில காளைகள் ரிங்ரோடு வழியாக ரோட்டில் சென்ற வாகனத்தின் மீது மோதி சென்றது. இதனை பார்க்க அப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இளைஞர்கள் இந்நிகழ்ச்சியை பெரும் ஆரவாரமாக நடத்தினர். இது ஜல்லிக்கட்டு விழா போல் நடைபெற்றது. அப்போது போலீசார் யாரும் இல்லை. இந்நிகழ்ச்சி நடத்த போலீஸ், மாவட்ட நிர்வாகத்திடம் யாரும் முன் அனுமதி பெறவில்லை.

அதுபோல் காளைகளையும் அனுமதியின்றி கொண்டு வந்திருந்தனர். கொரோனாவுக்காக 144 தடையுத்தரவு உள்ள இந்த சூழலில், முகக்கவசம் அணியாமலும், கூட்டம் கூட்டமாக திரண்டிருந்தது மேலும் கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும் என அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர்.

Tags : area ,Madurai Ring Road , Over 50, bull, without permission, jallikkattu
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி