×

அறந்தாங்கியில் சுற்றுலா பயணிகளை குழப்பும் வழிகாட்டி பலகை: அரசு அதிகாரிகள் அலட்சியம்

அறந்தாங்கி: அறந்தாங்கியில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகையில் வழிகாட்டு குறியீடு தவறாக உள்ளதால் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். தமிழக அரசின் சுற்றுலாத்துறை மூலம் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல வேண்டிய வழிகள் குறித்த விபரங்களுடன் ராட்சத விளம்பரப் பலகைகள் தமிழகம் முழுதும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு பலகை சாலை வழியாக சுற்றுலா செல்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

அறந்தாங்கியில் காரைக்குடி செல்லும் சாலையில் செக்போஸ்ட்டில் இருந்து சிறிது தூரத்தில் இதுபோன்ற வழிகாட்டு பலகை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டு பலகையில் ஆவுடையார்கோவில், தொண்டி, ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் அரண்மனை, ஏர்வாடி தர்ஹா ஆகிய இடங்களை குறிப்பிட்டு, அந்த இடங்களுக்கு செல்லும் தூரம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு இடத்திற்கு அருகில் ஒரு வழிகாட்டு குறிபோடப்பட்டுள்ளது.

தற்போது வழிகாட்டு பலகை அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து, வழிகாட்டு பலகையில் குறிப்பிட்டுள்ள இடங்கள் நேராக சென்று வலது புறம் வளைந்து இருக்க வேண்டும். ஆனால் வழிகாட்டு பலகையில் நேராக செல்வது போன்று உள்ளது. இதனால் திண்டுக்கல், காரைக்குடி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இந்த வழிகாட்டு பலகையில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு குறிப்படி நேராக சென்று விடுகின்றனர். நீண்ட தூரம் சென்ற பின்பு அவர்கள் சென்றது தவறான பாதை என்பதை உணர்ந்து மீண்டும் திரும்பி வந்து, பின்னர் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்கின்றனர். இதுகுறித்து வாகன ஓட்டுனர்கள் கூறியது:


சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு தடங்கலின்றி விரைவாக செல்வதற்கு ஏதுவாக தமிழக அரசின் சுற்றுலாத்துறை சார்பில் வழிகாட்டு பலகைகளை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டு பலகைகளில் இடங்களின் பெயர்களுக்கு அருகே அம்புகுறியிட்டு காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக காரைக்குடி சாலையில் உள்ள வழிகாட்டு பலகையில் குறிப்பிட்டுள்ள ஆவுடையார்கோவில், தொண்டி, ஏர்வாடி தர்ஹா, ராமலிங்கவிலாசம் அரண்மனை உள்ளிட்ட இடங்கள் நேராக சென்று வலதுபுறம் திரும்பும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் நேராக செல்வது போல குறியீடு உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் குழப்பம் அடைகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.

சுற்றுலா செல்லும் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள வழிகாட்டு பலகையில் ஊரின் பெயரை குறிப்பிடும் இடங்களில் குறியீடுகளை குறிப்பிடும்போது சரியாக குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது. எனவே அறந்தாங்கி காரைக்குடி சாலையில் உள்ள வழிகாட்டு பலகையில் உள்ள குறியீட்டை சரியாக குறிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டுனர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags : Guide board ,Aranthangi ,Government officials , Charity, tourist, confusion, guide board
× RELATED அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 68.80 சதவீதம் வாக்கு பதிவு