×

குமரி மாவட்ட ரேஷன்கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம்: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக இலவசமாக அரிசி மற்றும் சீனி, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், கூட்டுறவு பண்டகசாலை மற்றும் நுகர்பொருள் வாணிப கழகம் ஆகியவை மூலம் மாவட்டத்தில் 800க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் வாயிலாக பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு வேளையில் மத்திய அரசின் பங்களிப்பாக கூடுதல் அரிசி விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதில் ஒவ்வொரு ரேஷன்கார்டுதாரர்களுக்கும் 40, 50, 60 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது.

ஆனால் இவ்வாறு அதிக அளவில் வழங்கப்படுகின்ற அரிசி பெரும்பாலும் தரமற்றதாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. சில வேளையில் 20 கிலோ அரிசி வேறாகவும், இதர அரிசி வேறாகவும் என்று விதம் விதமாகவும் பொதுவிநியோக திட்ட அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. தரமற்ற அரிசி விநியோகம் கொரோனா ஊரடங்கு காரணமாக வேதனையில் உள்ள மக்களை மேலும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அதிகப்படியாக வழங்கப்படுகின்ற அரிசி வீட்டில் கொண்டு வந்து வைக்கப்பட்டு அவை மேலும் கெட்டுப்போகிறது. கூடுதல் அரிசிக்கான தொகையை நிவாரண உதவியாக வழங்கினால் அதனை வேறு தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக ஐக்கிய கம்யூனிஸ்ட் குமரி மாவட்ட செயலாளர் பொன்னுலிங்க ஐயன் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

அக்டோபர் மாதம் ரேஷன்கடைகளில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி தஞ்சாவூரில் இருந்து வருகிறது என்று கூறுகின்றனர். இந்த அரிசி பழுப்பு நிறமாகவும், கருப்பு அரிசி, கல், மண் போன்றவை அதிகமாகவும், தரம் குறைந்தும் உள்ளது. சமைத்த சாதத்தை சாப்பிட இயலவில்லை. இதற்கு முன்பு நாகர்கோவில், பள்ளிவிளையில் உள்ள மத்திய அரசு அரிசி கிட்டங்கியில் வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படும் அரிசி சேமித்து வைக்கப்பட்டு ரேஷன்கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

அவை தரமாக இருந்தது. தற்போது தஞ்சாவூரில் இருந்து கொள்முதல் செய்து வழங்கப்படும் அரிசி தரமாக இல்லை. அதிகாரிகளின் செயல்பாடுகள் காரணமாக இந்தநிலை ஏற்பட்டுள்ளது. எனவே ரேஷன்கடைகளில் பள்ளிவிளையில் உள்ள மத்திய அரசு கிட்டங்கியில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அரிசி விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : district ,ration shops ,Kumari , Kumari, ration shops, substandard rice, distribution
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...