×

போலீஸ் அனுமதியின்றி குதிரை வண்டி பந்தயம் நடத்த முயற்சி: ஒருங்கிணைப்பாளர் உள்பட 5 பேர் கைது

திருவெறும்பூர்: திருச்சி அருகே போலீஸ் அனுமதியின்றி குதிரை வண்டி பந்தயம் நடத்த முயற்சி நடந்தது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதில் சில தளர்வுகள் இருந்தாலும் பொது வெளியில் விழாக்கள் நடத்துவதற்கு அனுமதி இல்லை. இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் திருச்சி -தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் அரைவட்ட சாலை பகுதியில் போலீஸ் அனுமதி இல்லாமல் குதிரை வண்டி பந்தயம் நடக்க இருப்பதாக துவாக்குடி போலீசுக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது திருச்சி, சேலம், தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 25ரேஸ் வண்டி குதிரைகள் அந்த பகுதியில் குவியத்தொடங்கியது. இதனை கண்ட போலீசார் சேலத்தை சேர்ந்த இரண்டு குதிரைகளோடு, வண்டிகளை பிடித்தனர். போலீசார் குறைவான எண்ணிக்கையில் இருந்ததால், வெளியூரிலிருந்து வந்த குதிரைகளையும், வண்டிகளையும் அதன் உரிமையாளர்கள் வாகனங்களில் ஏற்றிக்கொண்டு தப்பி சென்றனர்.இதுதொடர்பாக துவாக்குடி போலீசார் நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்ததும் அவர்கள், அரை வட்ட சாலையில் வந்தபோது அவ்வழியாக லோடு ஆட்டோவில் ஏறி தப்பிச்செல்ல முயன்ற ஒரு குதிரை வண்டி மற்றும் குதிரையை பூலாங்குடி காலனி பகுதியில் மடக்கி பிடித்தனர்.

அந்த குதிரை கல்லணை அருகே திருச்சென்னம்பூண்டி பகுதியை சேர்ந்தது என்பதும், குதிரை வண்டி பந்தயம் தொடங்குமிடம் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் அந்த குதிரையும், வண்டியும் துவாக்குடி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து துவாக்குடி போலீசார் வழக்கு பதிந்து குதிரை வண்டி பந்தயம் நடத்தும் ஒருங்கிணைப்பாளர் துவாக்குடியை சேர்ந்த சுந்தர் (30), பிரபு (21), சேலம் ஆத்தூர் அக்கசட்டி பாளையத்தை சேர்ந்த கிரண்குமார் (26), கல்லணை பூதலூர் பூண்டியை சேர்ந்த பாரதிதாசன் (22), அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன் (22) ஆகிய 5 பேரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், இந்த குதிரை பந்தயம் மதுரை பகுதியில் இறந்து போன குதிரை வைத்தியர் ஒருவரின் நினைவாக நடத்தப்படுவதாகவும், இதில் வெற்றி பெறுபவருக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.ஆனால் ரொக்கப்பரிசு எவ்வளவு என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.

Tags : carriage race ,coordinator , Police, without permission, horse-drawn carriage, racing, 5 arrested
× RELATED அருணாச்சலில் இருந்து போனா பாஸ்போர்ட்,...