×

உடன்குடி அருகே மேலராமசாமியாபுரத்தில் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட சாலை சேதம் : பொதுமக்கள் போராட முடிவு

உடன்குடி: உடன்குடி அருகே மேலராமசாமியாபுரத்தில் இரவோடு, இரவாக அமைக்கப்பட்ட சாலை சிதிலமடைந்து வருவதால் பொதுமக்கள் போராட முடிவு செய்துள்ளனர்.  உடன்குடி யூனியனுக்குட்பட்ட நங்கைமொழி பஞ்சாயத்து மேலராமசாமியாபுரத்தில் இருந்து சாத்தான்குளம் செல்லும் வழியில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் சாலை சீரமைப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டது. தொடர்ந்து டெண்டர் விடப்பட்டு சாலை சீரமைக்கும் பணி நடந்தது. இரவோடு இரவாக 25க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு ஏற்கனவே சிதிலமடைந்த சாலையின் மீது புதிதாக தார்ச்சாலை அமைத்தனர்.

இதுகுறித்து அப்போது அந்த பகுதிமக்கள் கேட்ட போது, காலையில் மீண்டும் புதுப்பித்து போடப்படும் என மழுப்பலான பதிலை கூறி சாலையை அமைப்பதிலேயே குறியாக இருந்துள்ளனர். மேலும் காட்டுப்பகுதிகளில் சில இடங்களில் சரிவர தார் ஊற்றாமல் அமைக்கப்பட்டதால் தற்போது சாலை பெயர்ந்து கொண்டே இருக்கிறது.  பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலையில் சிதறி கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. சாலை அமைக்கப்பட்ட பிறகு கரையை பலப்படுத்தும் விதமாக கிராவல் சரள்களை கொண்டு நிரப்புவர். ஆனால் இதுவரை சாலையின் ஓரங்களை பலப்படுத்தும் பணியும் நடைபெறவில்லை. சாலை அமைக்கப்பட்ட ஒருசில நாட்களிலேயே சிதிலமடைந்தது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகமும் தக்க நடவடிக்கை எடுத்து இரவோடு, இரவாக அமைக்கப்பட்ட சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாலைகளை சீரமைக்காவிடில் பொதுமக்கள் போராட்டம் நடத்தப்போவதாக முடிவு செய்துள்ளனர்.

Tags : Civilians ,Udankudi ,Melaramasamiyapuram , Fellowship, road damage, civilians, fight
× RELATED தேரியூர் கோயிலில் பூக்குழி திருவிழா