×

காற்று, மழையால் குறுவை அறுவடை பணிகள் பாதிப்பு: ஏக்கருக்கு 20 மூட்டை மட்டும் மகசூல்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா வடமழை மணக்காடு, பிராந்தியங்கரை, மூலக்கரை, உம்பளச்சேரி ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் குறுவை அறுவடை பணி மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்து உள்ளனர்.
நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் சம்பா, குறுவை, தாளடி என முப்போக சாகுபடி நடைபெறும். பருவ மழை சரியாக பெய்யாத காரணத்தாலும், மேட்டூர் அணையில் இருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்படாததாலும் கடந்த 8 ஆண்டுகளாக முப்போக சாகுபடி நடைபெறவில்லை.

இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியின் தீவிரமாக ஈடுபட்டனர். நாகை மாவட்டத்தில் 45ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி பணியை விவசாயிகள் மேற்கொண்டனர். இதில் வேதாரண்யம் தாலுகாவில் 5 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் இருந்தன.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் பலத்த காற்றினால் அறுவடைக்கு தயாராக இருந்த 2 ஆயிரம் எக்டேர் நீரில் மூழ்கியது. இந்த வயல்களில் மழை நீர் வடியாததால் பெரும்பாலான வயல்களில் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இருந்தாலும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் எந்திரம் மூலம் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஒரு ஏக்கருக்கு 30 முதல் 40 மூட்டை வரை மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பி இருந்தனர். ஆனால் மழை மற்றும் காற்றினால் ஏக்கருக்கு 20 மூட்டையே கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர். தமிழக அரசு, மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை கணக்கிட்டு அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு 25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Harvesting of crops by wind and rain, works, damage
× RELATED யானை தாக்கி விவசாயி பலி