×

கோவில்பட்டி பகுதியில் போதிய மழை பெய்யாததால் மக்காச்சோள பயிர்கள் கருகும் அபாயம்

கோவில்பட்டி:  கோவில்பட்டி பகுதியில் போதிய மழை பெய்யாததால் மக்காச்சோளம் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.  தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி,  எட்டயபுரம், விளாத்திகுளம், கயத்தாறு,  கழுகுமலை, ஓட்டப்பிடாரம், புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராபி பருவத்தை முன்னிட்டு சுமார் 5 லட்சம் ஏக்கரில் உளுந்து, பாசி, மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், கம்பு, குதிரைவாலி, கொத்தமல்லி, மிளகாய், வெங்காயம் போன்றவைகளை பயிரிட விவசாயிகள் தங்கள் நிலங்களை தயார்படுத்தினர்.

 முதல் கட்டமாக மக்காச்சோளம், வெள்ளைச் சோளம், பருத்தி போன்றவைகளை கடந்த இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு பயிரிட்டனர். ஏற்கனவே நிலத்தில் இருந்த ஈரப்பதம் காரணமாக விதைகள் சில இடங்களில் முளைத்தும், ஈரப்பதம் இல்லாத இடங்களில் முளைக்காமலும் காணப்பட்டன. தற்போது மக்காச்சோளம் சுமார் 60 ஆயிரம் ஏக்கரிலும், வெள்ளைச் சோளம் சுமார் 30 ஆயிரம் ஏக்கரிலும், பருத்தி 5 ஆயிரம்  ஏக்கரிலும் பயிரிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த 25 நாட்களாக சித்திரை மாதம் போன்று அதிக வெயில் அடிப்பதாலும், தென்மேற்கு பருவக்காற்று தொடர்ந்து வீசுவதாலும், மழை பெய்யாமல் போக்கு காட்டுகிறது. இதனால் நிலங்களில் முளைத்த மக்காச்சோளம், வெள்ளைச் சோளம் போன்ற பயிர்கள் கருகி வருகின்றன. இதனை கண்டு விவசாயிகள் மனமுடைந்து காணப்படுகின்றனர்.

 ஏற்கனவே கொரோனா தாக்கம் காரணமாக விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடந்த ஆண்டு விதைத்த மகசூலை இன்னும் விலைக்கு விற்க முடியாமல் வீடுகளிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க குடோன்களிலும். ஒழுங்குமுறை விற்பனை கூடங்களிலும் இருப்பு வைத்துள்ளனர்.  இந்நிலையில் இந்த ஆண்டு பயிரிடப்பட்ட பயிர்கள் மழையின்றி கருகுவதால் விவசாயிகள் மேலும் கவலை அடைந்துள்ளனர். தற்போது  உரம், விதை, உழவு ஆகியவற்றிற்கு ஏக்கருக்கு சுமார் ரூ.பத்தாயிரம் வீதம் செலவு செய்துள்ளனர். எனவே வறட்சி நிவாரணமாக அரசு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 இதுகுறித்து கரிசல் பூமி விவசாய சங்கத்தலைவர் வரதராஜன் கூறுகையில், ‘கடந்த 5 மாத காலமாக கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது கோவில்பட்டி பகுதியில் மக்காச்சோளம், வெள்ளைச் சோளம் ஆகியவை பல ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். அவை முளைத்து வரும் நிலையில் போதிய மழை இல்லாமல்  பயிர்கள் கருகத்தொடங்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கத் தொடங்கியுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றார்.

Tags : rainfall ,area ,Kovilpatti , Kovilpatti, insufficient rainfall, maize crop due to lack of rainfall
× RELATED கோவில்பட்டியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வருபவருக்கு வலை