×

நடிகையை திருமணம் செய்துகொள்வதாக மோசடி நடிகர் தர்ஷன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு: கைது செய்ய மகளிர் போலீசார் தீவிரம்

சென்னை: நடிகை சனம் ஷெட்டியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வழக்கில் நடிகர் தர்ஷன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று மகளிர் போலீசார் தெரிவித்துள்ளர். மாடல் அழகியும், நடிகையுமான சனம் ஷெட்டி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி 31 ம் தேதி நடிகர் தர்ஷன் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் நடிகர் தர்ஷனும் நானும் காதலித்து வந்தோம். பிறகு இரு வீட்டாரின் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2019 ம் ஆண்டு மே மாதம் விமரிசையாக திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

பிறகு அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதால் திருமண தேதியை தள்ளி வைப்பதாக கூறினார். அதன்படி நானும் திருமணத்தைத் தள்ளிப்போட்டேன். பிறகு நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் தர்ஷன், எனக்கு பல ஆண்களுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதாக என் மீது உண்மைக்கு புறம்பாக குற்றம் சாட்டி விலகத் தொடங்கினார். நான் பல முறை எடுத்துக் கூறியும் எனது திருமணத்தை நிறுத்திவிட்டார். மேலும் தர்ஷன் எனது வருங்கால கணவர் என்பதால் அவருடன் நான் உடல் ரீதியாக உறவு வைத்துக்கொண்டேன். இந்நிலையில் அவர் ஆண் நடிகர்களுடன் என்னை தொடர்பு படுத்தி விலகி சென்றுவிட்டார். எனவே திருமண ஆசை காட்டி, நிச்சயதார்த்தம் செய்து, உடல் ரீதியாக ஒன்றிணைந்த பிறகு ஏமாற்றிய நடிகர் தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறி இருந்தார்.

நடிகை சனம் ஷெட்டி அளித்த புகார் 9 மாதங்கள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் தற்போது போலீஸ் கமிஷ்னராக உள்ள மகேஷ் குமார் அகர்வால், புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க அடையார் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசாருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில் மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நடிகை சனம் ஷெட்டியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து நடிகர் தர்ஷன் மீது பெண்ணை மானபங்கம் படுத்துதல், ஆபாசமாக பேசுதல், மிரட்டல், மோசடி ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து நடிகர் தர்ஷன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று போலிசார் தெரிவித்துள்ளனர். நடிகையை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய வழக்கில் நடிகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் நடிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Darshan ,actress ,Women police , Actress Darshan charged with 4 counts of marrying actress: Women police intensify arrests
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...