×

கமுதி அருகே எல்லைப்பிடாரி அம்மன் கோயிலில் ‘ஆண்களுக்கு மட்டும்’ திருவிழா: 50 ஆடுகளை பலியிட்டு ‘கம கம’ கறிவிருந்து

கமுதி: கமுதி அருகே, ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் எல்லைப்பிடாரி அம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவில் 50 ஆடுகள் பலியிடப்பட்டு கமகம கறி விருந்து பரிமாறப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே முதல்நாடு கிராமத்தின் கண்மாய் கரையில் எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. வருடத்திற்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா நடக்கும் தேதி அறிவித்தது முதல் ஒரு வார காலம் இப்பகுதிக்கு பெண்கள் யாரும் வரவில்லை. நேற்று முன்தினம் இரவு திருவிழா துவங்கியதும், கால்படாத மண்ணெடுத்து அம்மன் பீடம் வடிவமைக்கப்பட்டது.

நேற்று அதிகாலை அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் 50 ஆடுகள் பலியிடப்பட்டு, கைக்குத்தல் அரிசியில் கறி விருந்து தயார் செய்யப்பட்டது. சாதங்களை உருண்டைகளாக உருட்டி எல்லைப்பிடாரி அம்மனுக்கு படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பின் கறி விருந்து ஆண்களுக்கு பரிமாறப்பட்டது. இங்குள்ள எந்த பொருளையும் பெண்கள் பார்க்கக்கூடாது என்பதால் மீதமிருந்த உணவு, விபூதி, பூஜை பொருட்கள் அனைத்தும் குழி தோண்டி புதைக்கப்பட்டது. இந்த விழாவில் கமுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.

Tags : men ,festival ,temple ,Kamuti ,Ellaippidari Amman , ‘Only for Men’ Festival at Ellaippidari Amman Temple near Kamuti: ‘Kama Kama’ Feast of Sacrifice 50 Goats
× RELATED சித்திரை திருவிழாவிற்கு தனிநபர்...