×

உள்ளாட்சிகளுக்கு தமிழக அரசு தாராளமாக நிதி தருகிறது: சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி கலெக்டர்

தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சிகள் மூலமும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் கடந்த 6 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனினும் வைரஸ் தடுப்பு பணிகளுக்காக பிளீச்சிங் பவுடர் வாங்குதல், தூய்மை பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற சிறிய செலவினங்கள் மட்டுமே அந்தந்த உள்ளாட்சிகளின் பொது நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனாவிற்கான மற்ற தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ‘பேரிடர் மேலாண்மை நிதி ஒதுக்குகிறது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு மட்டும் இதுவரை ₹5  கோடிக்கும் மேல் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலமே கொரோனா தடுப்பு பணிகளுக்காக மருத்துவமனைகளில் படுக்கைகள் வாங்குதல், கோவிட் பரிசோதனை செய்தல், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாப்பாடு வழங்குதல், கோவிட் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா காலத்திலும் மத்திய, மாநில அரசுகள் உள்ளாட்சிகளுக்கு வழங்க வேண்டிய மாநில நிதிக்குழு மானியம், மத்திய நிதிக்குழு மானியம் ஒதுக்கீடு ஆகியவை எந்த தாமதமும் இன்றி அனைத்து மாவட்டங்களுக்கும் கிடைத்து வருகிறது. உள்ளாட்சிகளில் தற்போது வரி வசூல் குறைவாக இருந்தாலும், அவர்களது நிதி  பற்றாக்குறையை சமாளிக்க கேட்கும் நிதியை வழங்கி வருகிறோம். எனவே இதுவரை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ளிட்ட எந்த  உள்ளாட்சிகளிலும் நிதி தட்டுப்பாடு என்பது இல்லை. ஊழியர்களுக்கான ஊதியம் வழக்கம்போல் வழங்கப்பட்டு வருகிறது. மின்கட்டணம் செலுத்துவதற்கு தனி கணக்கு உள்ளது. எனவே மின் கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்துவதிலும்  தாமதமோ, நிதி தட்டுப்பாடோ இல்லை.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட உள்ளாட்சிகளுக்கு மாநில நிதிக்குழு, மத்திய நிதிக்குழு மானியம் வரப் பெற்றுள்ளது. அவை அனைத்து உள்ளாட்சிகளுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்துகளில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கணக்குகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏதாவது ஒரு கணக்கில் பணம் இல்லை என்றாலும், மற்றொரு கணக்கில் இருந்து அதற்கான நிதி பிரித்து வழங்கப்படும். உள்ளாட்சிகளுக்கு தமிழக அரசு தாராளமாக நிதி தருகிறது. கிராம  பஞ்சாயத்துகளில் 100 நாள் வேலை உறுதி திட்டப் பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன. இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கான ஊதியம் அவர்களது வங்கி கணக்கில் குறித்த காலத்தில் வரவு வைக்கப்படுகிறது. அனைத்து உள்ளாட்சிகளிலும் குடிநீர், சுகாதார பணிகள் வழக்கம்போல் நடந்து வருகின்றன.  

சாலைகள், அடிப்படை கட்டமைப்பு பணிகள், வளர்ச்சிப் பணிகள் ஆகியவை விரைவுபடுத்தப்பட்டு தற்போது முழு வீச்சில் நடந்து வருகின்றன. உள்ளாட்சிகளில் அனைத்துப் பணிகளும் தொய்வின்றி நடந்து வருகின்றன. கொரோனாவிற்காக கூடுதலாக நிதி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. எனவே நிதி தட்டுப்பாடு என்ற சூழ்நிலை இல்லை. அனைத்து உள்ளாட்சிகளிலும் குடிநீர், சுகாதார பணிகள் வழக்கம்போல் நடந்து வருகின்றன. அனைத்துப் பணிகளிலும் எந்த தொய்வும் இல்லை. கொரோனாவிற்காக கூடுதலாக நிதி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. நிதி தட்டுப்பாடு என்ற சூழ்நிலை இல்லை.

* மக்கள் பிரதிநிதிகள் வந்தும் மக்களுக்கு பயனில்லை: வீரராகவன், ஒன்றியப் பெருந்தலைவர், மதுரை மேற்கு ஒன்றியம்
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கடந்த 2016, அக்.25 வரையே உள்ளாட்சி பிரதிநிதிகள் கட்டுப்பாட்டில் உள்ளாட்சி நிர்வாகம் இருந்தது. இதன் பிறகு தனி அலுவலரின் கைக்கு போய் விட்டது. பின்னர் சுமார் மூன்றரை வருடங்களாக உள்ளாட்சிகளில் மக்கள் பிரதிநிதிகளின்றி, போதிய அடிப்படை வசதிகளை பொதுமக்களால் பெற முடியாத நிலையில், பெரும் பரிதவிப்பிற்கு ஆளாகினர். அதன்பின் பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து ஊரக உள்ளாட்சிக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. இனியாவது தங்கள் குறைகள் முழுமையாக நிறைவேறும் என்று நம்பி மக்கள் எங்களை தேர்ந்தெடுத்தார்கள். நாங்களும் மக்கள் பணி செய்திடும் ஆசையில் பதவிக்கு வந்தோம்.

ஆனால் இன்றைய நிலைமையோ தலைகீழாக மாறியுள்ளது. மத்திய அரசு ஒன்றியங்களுக்கென ஒதுக்கும் பொதுநிதியானது நேரடியாக, அந்தந்த ஒன்றிய அலுவக வங்கிக் கணக்கிற்கு வரும். அப்படி செலுத்தப்படும் தொகையும் கொரோனா பணிகள், ஓடையை தூர்வாருதல் என சாக்குப்போக்கு சொல்லி ‘கை’ வைக்கப்படுகிறது. ஒன்றியங்களுக்கு அரசின் மூலம் கிடைக்க வேண்டிய நிதிகள் சரிவர கிடைக்காத நிலையில், மாதந்தோறும் ஒன்றியங்களுக்கு வரவேண்டிய மாநில நிதிக்குழு மானியமும் பல மாதங்களாக வரவில்லை. ஊராட்சியில் இருக்கும் மக்கள் தொகையை கணக்கிட்டு, அதற்கேற்றபடி இந்த மாநில நிதி குழு மானியம் வழங்கப்படும்.

இதைக் கொண்டே ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் தார்ச்சாலைகள், சுகாதார மேம்பாட்டு பணிகள், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் இந்த நிதி கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக கிடைக்காத நிலையில், எந்த பணியும் நடைபெறாமல் குண்டும் குழியுமான சாலைகளும், சுகாதாரச் சீர்கேடுகளும், குடிநீர் பற்றாக்குறையும் என கிராமங்கள்தோறும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திமுக ஒன்றிய பெருந்தலைவர்களைக் கொண்ட ஒன்றியங்களில் நிதி ஒதுக்குவதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நிர்வாகம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது.

அண்மையில் இதனைக் கண்டித்து மதுரையில் உள்ளிருப்பு போராட்டமும் நடந்தது. மாதம்தோறும் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ரூ.37 லட்சம் வரை, அவசர கால பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படும். இந்த நிதியானது கடந்த 6 மாதங்களாக பெரும்பாலான, குறிப்பாக திமுக கூட்டணி தலைவர்களைக் கொண்ட ஒன்றியங்களுக்கு ஒதுக்கப்படவில்லை. ஆனால், ஒன்றிய பொது நிதியையும் மாவட்ட நிர்வாகம் வேறு பணிகளுக்கென எடுத்து செலவிடுகிறது. இப்படி ஒன்றிய பொது நிதியிலிருந்து எடுக்கப்பட்ட பல கோடிகளை, மாவட்ட நிர்வாகம் ஒன்றிய நிர்வாகத்திற்கு தர வேண்டியுள்ளது. இனியும் ஒன்றியங்களுக்கு நிதி வரும் பட்சத்தில் அதனையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துக் கொள்ளும் சூழலே உள்ளது.

போதிய நிதியில்லாததால் பல ஒன்றியங்களில் ஒன்றிய கவுன்சில் கூட்டமே சரிவர நடத்தப்படவில்லை. நான் தலைவராக இருக்கும் மதுரை மேற்கு ஒன்றியத்தில் கூட கவுன்சிலர்கள் பதவியேற்று கிட்டத்தட்ட 10 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே கவுன்சில் கூட்டம் நடத்தியுள்ளோம். அதிலும் ஒவ்வொரு கவுன்சில் பகுதிக்கும் ரூ.5 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் மட்டுமே வழங்கியுள்ளோம். அதே போல் தமிழகம் முழுவதும் உள்ள  ஊராட்சிகளிலும் மாநில அரசின் மூலம் வழங்கப்படும் மாநில நிதி குழு மானியமும் பல மாதங்களாக சரிவர கிடைக்கவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகமும் நிதியின்றி தத்தளித்து வருகிறது. இப்படி அரசு உள்ளாட்சி நிர்வாகத்தை முறையாக நடத்தாததால் மக்கள் பிரதிநிதிகள் வந்தும் மக்களுக்கு பலனில்லை.

இனியாவது மத்திய, மாநில அரசுகள் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொது நிதியை முறையாக வழங்கி மக்கள் பிரதிநிதிகளின் மூலம் பொது மக்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை வசதிகளையாவது செய்துத் தர உதவுவது அவசியம். மாநில அரசின் மூலம் வழங்கப்படும் மாநில நிதி குழு மானியம் பல மாதங்களாக கிடைக்கவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகம் நிதியின்றி தத்தளித்து வருகிறது. இப்படி அரசு உள்ளாட்சி நிர்வாகத்தை முறையாக நடத்தாததால் மக்கள் பிரதிநிதிகள் வந்தும் மக்களுக்கு பலனில்லை.

Tags : Government ,Tamil Nadu ,Thoothukudi Collector ,Sandeep Nanduri , Government of Tamil Nadu generously funds localities: Sandeep Nanduri, Thoothukudi Collector
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...