×

சென்னையின் எப்.சியில் மெமோ

சென்னை: மெமோ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் எமர்சன் கேமஸ் டி மெளராவை ஃப்ரீ டிரான்ஸ்பர் மூலம் சென்னையின் எப்.சி அணி 2020-21 சீசனுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. பிரேசிலைச் சேர்ந்த மெமோ (32 வயது), கடந்த மூன்று சீசன்களாக ஜாம்ஷெட்பூர் கிளப்பில் இருந்தார். அங்கு அவரது ஒப்பந்தம் முடிவடைந்ததை அடுத்து, இரண்டு முறை ஐஎஸ்எல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையின் எப்.சியுடன் அவர் இணைந்துள்ளார். அவரது அனுபவமும், திறமையும் சென்னை அணியின் தரத்தை மேலும் உயர்த்தும் என அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து மெமோ கூறுகையில், ‘சென்னையின் எப்.சி குடும்பத்தில் இணைவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். வரும் சீசன் அட்டகாசமாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால், விஸ்வாசமான இந்த ரசிகர்களின் பேராதரவு களத்தில் கிடைக்காது என்பது வருத்தமான விஷயம்தான். ஏனெனில், ஒவ்வொரு முறை நான் சென்னையில் விளையாடும்போதும், சென்னை ரசிகர்களின் அர்ப்பணிப்பையும், ஆர்வத்தையும் பார்த்து வியந்திருக்கிறேன். ரசிகர்கள் களத்துக்கு வர முடியாவிட்டாலும், அவர்கள் ஆதரவு எங்களுக்கு உண்டு என்பதை மனதில் வைத்து, ஒன்றாக செயல்பட்டு, சாம்பியன் பட்டம் வெல்ல முயற்சிப்போம்’ என்றார்.

‘மெமோவின் வருகை அணிக்கு பலம் சேர்த்திருக்கிறது. ஐஎஸ்எல் தொடரில் நீண்ட நாட்களாக விளையாடிய அவரது அனுபவமும், குறிப்பாக, டிஃபன்ஸ் ஏரியாவில் அவரது பன்முகத்தன்மை வாய்ந்த திறமையும்  நிச்சயம் எங்களுக்கு பலமாக அமையும். திறமையான ஒருவரை ஒப்பந்தம் செய்திருக்கிறோம். நுட்பம், ஆக்ரோஷம் இரண்டும் கலந்த கலவையாக இருக்கும் அவரது திறமை, அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்’ என்று சென்னையின் எப்.சி தலைமை பயிற்சியாளர் சபா லஸ்லோ தெரிவித்துள்ளார்.

Tags : Chennai , Memo in FC, Chennai
× RELATED ஐஎஸ்எல் 2020 கால்பந்து: சென்னையின் எப்சி-ஜாம்ஷெட்பூர் எப்சி இன்று மோதல்