×

இப்ப, கொஞ்சம் பரவாயில்ல... கொரோனாவால் பாதித்த டிரம்ப் வீடியோவில் பேச்சு

வாஷிங்டன்: கொரோனா தொற்று காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘நான் நலமாக இருக்கிறேன். விரைவில் திரும்பி வருவேன்,’ என்று வீடியோ வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உதவியாளருக்கு ஏற்பட்ட கொரோனா நோய் தொற்று, அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியாவையும் தாக்கியுள்ளது. டிரம்ப்புக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டதால், ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவருடைய உடல் எடை, வயது, ஏற்கனவே உள்ள நோய்களின் தன்மையால், கொரோனாவால் அவருடைய உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இந்நிலையில், 4 நிமிடங்கள் ஓடக் கூடிய வீடியோ செய்தி ஒன்றை டிரம்ப் தனது டிவிட்டர் பதிவில் நேற்று வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நாம் செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்கிறது. அந்த வேலையை நாம் முடிக்க வேண்டும். நான் திரும்பி வருவேன். விரைவில் திரும்பி வருவேன் என்று நினைக்கிறேன். எப்படி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினோமோ, அதேபோல் அதனை நிறைவு செய்ய வேண்டும். நான் கொரோனா வைரசுடன் போராடிக் கொண்டு இருக்கிறேன். அதனை வெல்வேன் என நம்பிக்கை கொண்டுள்ளேன்.  நான் முன்பைவிட தற்போது நன்றாக உணர ஆரம்பித்து உள்ளேன். அடுத்த சில நாட்கள் உண்மையான சோதனை நாட்களாக இருக்கும். அடுத்த இரண்டு நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி உள்ளவனாக இருக்க விரும்புகிறேன். நான் குணமடைய வேண்டும் என வாழ்த்துக்கள் தெரிவித்த மக்களுக்கும், உலக தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

* கம்யூ. கட்சியினர் அமெரிக்காவில் குடியேற தடை
இறக்குமதி வரி அதிகரிப்பு, கொரோனா பரவல், அண்டை நாடுகளின் எல்லையில் அத்துமீறல், பல்வேறு நாடுகளுக்கு மிரட்டல் என சீனா அட்டூழியம் செய்து வருகிறது. குறிப்பாக, சீனாவில் இருந்து பரவிய கொரோனாவால், அமெரிக்கா கடுமையாக பாதித்துள்ளது. இதனால், அமெரிக்கா - சீனா இடையே மோதல் அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக, சீனர்களுக்கு தனது நாட்டில் தொழில் செய்வது, கல்வி கற்பது உட்பட பல்வேறு துறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளையும், தடைகளையும் அதிபர் டிரம்ப் விதித்துள்ளார். இந்நிலையில், எந்த நாட்டை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் அமெரிக்காவில் குடியேற அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிபர் டிரம்ப் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா குடியேற்ற சேவை மையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


* பிரசாரத்தில் குதித்தது குடும்பம்
டிரம்ப்பின் குடும்பம் அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி நடக்கும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில், டிரம்ப்பும், அவரை எதிர்த்து போட்டியிடும் ஜோ பிெடனும் தீவிரமாக களமிறங்கிய நேரத்தில்தான், டிரம்ப்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருப்பதால், ஆளும் குடியரசு கட்சியின் பிரசாரம் கடுமையாக பாதிக்கும் என கருதப்பட்டது. ஆனால், குடியரசு கட்சி தனது பிரசாரத்தை தீவிரப்படுத்த, ‘ஆபரேஷன் மகா’ என்ற வியூகத்தை வகுத்துள்ளது. ‘அமெரிக்காவை மீண்டும் தலைசிறந்த நாடாக்குங்கள்,’ என்ற கோஷத்தை முன்வைத்து, இந்த பிரசாரம் நடத்தப்பட உள்ளது. டிரம்ப் இல்லாத நிலையில், துணை அதிபர் வேட்பாளர் மைக் பென்ஸ் இதை முன்னின்று நடத்த உள்ளார். அவருக்கு பக்க பலமாக, டிரம்ப்பின் மகன்களான டிரம்ப் ஜூனியர், எரிக் டிரம்ப், அவரது மனைவி லாரா மற்றும் மகள் இவாங்கா, கூட்டணி கட்சித் தலைவர்கள், டிரம்ப் ஆதரவு அமைப்புகளும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளன. டிரம்ப் இல்லாத குறையை போக்கும் வகையில், இவர்களின் பிரசாரத்தில் அனல் பறக்கும் என கருதப்படுகிறது.

Tags : Trump , Now, a little bit okay ... talk in the Trump video affected by the corona
× RELATED தேர்தலில் தோற்றால் ரத்தகளறி ஏற்படும்:...