×

திருவள்ளூர் நகரில் ஆக்கிரமிப்பால் சுருங்கிய பொதுப்பணித்துறை கால்வாய்: காக்களூர் ஏரிக்கு மழைநீர் செல்வதில் சிக்கல்; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் திறந்த நிலையில், காக்களூர் ஏரிக்கு மழைநீர் செல்லும் பொதுப்பணித்துறை கால்வாய், ஆக்கிரமிப்புகளால் மிகவும் சுருங்கிவிட்டது. இதனால், மழைக்காலத்தில் மழைநீர் ஏரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கண்டும், காணாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட அய்யனார் அவென்யூவில் இருந்து எல்ஐசி, செயின்ட் ஆன்ஸ் பள்ளி, தலைமை அரசு மருத்துவமனை, ஆர்.எம் ஜெயின் மெட்ரிக் பள்ளி, ஜெயின் நகர், ஜெ.ஜெ.சாலை வழியாக பொதுப்பணித்துறையின் மழைநீர் கால்வாய்செல்கிறது. இந்த கால்வாய் காக்களூர் ஏரிக்கு செல்கிறது.

தற்போது இக்கால்வாயில் திருமண மண்டப உரிமையாளர்கள் சிலர் கழிவுநீரையும் வெளியேற்றி வருகின்றனர். மேலும் சிலர், ஆங்காங்கே கால்வாயை ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளனர். இதனால் ஆங்காங்கே கழிவுநீர் அப்படியே தேங்கி கிடக்கிறது. கால்வாயும் ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டது. மேலும், அதில் கொசுக்கள் முட்டையிட்டு உற்பத்தியாகி வருகிறது. மாலை 6 மணிக்கு மேல் அவ்வழியாக செல்பவர்கள் அனைவரையும் கொசுக்கள் கடித்து துரத்துகிறது.
மேலும், இதனால், அப்பகுதி மக்கள் டெங்கு, மலேரியா, யானைக்கால் வியாதி போன்ற நோய்கள் ஏற்படுமோ என அச்சத்துடன் உள்ளனர்.

மேலும், மாலை 6 மணிக்கு மேல் அனைத்து வீடுகளின் கதவுகள், ஜன்னல்களையும் கொசுக்களுக்கு பயந்து அடைத்துவிடுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘’திறந்தவெளியில் கால்வாய் உள்ளதோடு, அதை சுற்றிலும் புதர்மண்டிக் கிடப்பதால், அவ்வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் எதிர்பாராத விதமாக அதில் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி சீராக காக்களூர் ஏரிக்கு மழைநீர் செல்லும் வகையில், பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags : Public Works Canal ,Tiruvallur ,Koggalur Lake , Occupied Public Works Canal in Tiruvallur: Problem with rainwater flow to Koggalur Lake; Urging to take action
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தேர்தலில்...