×

திருநின்றவூரில் குண்டும் குழியுமான சாலைகளால் மக்கள் அவதி பட்டப்பகலில் டார்ச் லைட் அடித்து நூதன போராட்டம்

திருநின்றவூர்: திருநின்றவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் அன்னை இந்திரா நகர் உள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட வீடுகளில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரில் 3 பிரதான சாலைகள், 20க்கும் மேற்பட்ட குறுக்கு சாலைகள் உள்ளன. இதில், ஒரே ஒரு பிரதான சாலை மட்டும் ரூ.1கோடி செலவில் தார் சாலையாக கடந்த 6 மாதத்துக்கு முன்பு போடப்பட்டது. அந்த சாலையும், தற்போது குண்டும் குழியுமாக மாறி கிடக்கிறது. இதோடு மட்டுமில்லாமல், குறுக்கு சாலைகள் பல ஆண்டுகளாக போடப்படாமலே கிடக்கிறது. இதனால், சிறு மழை பெய்தால் கூட சாலைகள் சேறும் சகதியுமாக மாறி விடுகின்றன.

இதனால் பாதசாரிகள் அறவே நடமாட முடியவில்லை. மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் சாலைகளில் உள்ள பள்ளங்களில் விழுந்து செல்கின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல வடிகால் வசதி அறவே இல்லை. இதனால், சிறு மழை பெய்தால் கூட வீடுகளை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. தற்போது விட்டு விட்டு பெய்யும் மழையாலும் ஆங்காங்கே காலி இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய்களை பரப்புகிறது. மேற்கண்ட பிரச்சினைகள் குறித்து பொதுநல சங்கம் சார்பில் பலமுறை தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று காலை 11.30மணி அளவில் அப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட மக்கள் மக்கள் திரண்டு குண்டும் குழியுமான சாலையில் ‘’டார்ச் லைட்’’ அடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Thiruninravur ,roads , In Thiruninravur, people are suffering due to the bumpy roads.
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...