×

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மசோதா காங். ஆளும் மாநிலங்கள் அதிரடி முடிவு: பேரவை சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுகிறது

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக மசோதா நிறைவேற்ற, காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் அதிரடி முடிவு எடுத்துள்ளன. இந்த சட்டங்களை அமல்படுத்துவதை தள்ளிவைக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தும் மசோதாவை நிறைவேற்ற, இம்மாநில சட்டப்பேரவைகளின் சிறப்பு கூட்டம் விரைவில் கூட்டப்பட உள்ளது. சமீபத்தில் முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டங்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கடந்த மாதம் 27ம் தேதி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அவை அமலுக்கு வந்துள்ளன.

இந்த வேளாண் சட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜ கூட்டணியில் நீண்ட ஆண்டுகளாக அங்கம் வகித்து வந்த சிரோன்மணி அகாலி தளம், 23 ஆண்டு நட்பை முறித்துக் கொண்டது. அக்கட்சியை சேர்ந்த மத்திய உணவு பதனிடுதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், இந்த சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா உள்பட நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப்பில் ரயில் மறியல், சாலை மறியல் என பல்வேறு தொடர் போராட்டங்களை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடந்த 28ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், `அரசியலமைப்பின் 254 (2)வது பிரிவின் கீழ், மாநிலத்தின் அதிகார வரம்புக்குட்பட்டு, வேளாண் சட்டங்களை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்துவதை தவிர்க்க, சட்டப்பேரவையில் சட்டங்களை இயற்றுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும்,’ என காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கு அறிவுறுத்தினார். அதன்படி, காங்கிரஸ் ஆளும் புதுச்சேரி, பஞ்சாப், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில், வேளாண் சட்டங்கள் அமல்படுத்துவதை தடுப்பதற்கான மசோதாவை நிறைவேற்ற, விரைவில் சிறப்பு சட்டப் பேரவைக் கூட்டம் நடத்தப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது. அதோடு, இந்த பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய வரைவு மசோதாவையும், அந்தந்த மாநில அரசுகளுக்கு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது.

அதில் இடம் பெற்றுள்ள 2 முக்கிய அம்சங்கள் வருமாறு:
* மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எந்த தேதியில் இருந்து அமல்படுத்துவது என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
* விவசாயிகளுக்கும் நிறுவனங்கள் அல்லது வியாபாரிக்கும் இடையே நடக்கும் கொள்முதல் ஒப்பந்தம், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறையாமல் இருக்கக் கூடாது என்பதை மாநிலங்கள் உறுதிப்படுத்த அனுமதிக்க வேண்டும்.
இதன்படி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இந்த 2 முக்கிய அம்சங்கள் இடம் பெறும் வகையிலேயே மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. அதே  நேரம், காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைந்துள்ள மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் இந்த மசோதா நிறைவேற்றப்படுமா? என்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

அதேபோல், பாஜ அல்லாத பிற எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் கேரளா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் இதை நிறைவேற்றுமா? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. எனினும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக இந்த மாநிலங்கள் வழக்கு தொடுக்க உள்ளன. கேரளாவில் காங்கிரசை சேர்ந்த திருச்சூர் தொகுதி எம்பி.யான டி.என். பிரதாபன், ஏற்கனவே இந்த சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அடுத்தது என்ன? வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை ஒத்திவைக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பிறகு, அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி  வைக்கப்படும். இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கலாம் அல்லது மறுக்கலாம். அப்படி மறுக்கும் பட்சத்தில், அதற்கான காரணத்தை அவர் விளக்க வேண்டும்.

* அடுத்தது என்ன?
வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை ஒத்திவைக்கும் மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பிறகு, அது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கலாம் அல்லது மறுக்கலாம். அப்படி மறுக்கும் பட்சத்தில், அதற்கான காரணத்தை அவர் விளக்க வேண்டும்.

Tags : session ,The Assembly , Bill against agricultural laws Cong. Ruling States Action Decision: The Assembly passes a special session
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு