×

கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி 8 மாதங்களாக பஸ்கள் இயக்கப்படாத குக்கிராமங்கள்: பொதுமக்கள் தொடர்ந்து அவதி

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களாக கிராமப்புறங்களில் அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படாத நிலை தொடர்கிறது.
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது முதல் பொது போக்குவரத்தில் பஸ் போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டு கொரோனா தொற்று அதிகரித்ததால் பஸ் போக்குவரத்து முடங்கியது.

இந்தநிலையில் கடந்த மாதம் முதல் மீண்டும் பஸ்கள் இயக்கம் நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டாலும் முழுமையான பஸ்கள் இயக்கம் தொடங்கப்படவில்லை. நகர பகுதிகளில் மட்டுமே பஸ்கள் இயக்கம் நடைபெற்று வருகிறது.
இதனால் கிராமப்புறங்களில் பஸ்கள் இயக்கம் தொடங்கி நடைபெறவில்லை. பெரும்பாலான கிராமப்புற பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் கடந்த 8 மாதங்களாக பஸ்கள் சேவை இல்லாததால் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அருகே உள்ள நகர பகுதிகளுக்கு சென்று பல மணி நேரம் காத்திருந்து பஸ்களை பிடித்து பெருநகர பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். சிலர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு அமர்த்தியும் வந்து செல்கின்றனர். மருத்துவமனை, அரசு துறை அலுவலகங்களுக்கு செல்வதற்கும் சிரமங்கள் உள்ளது. இதனால் இவர்களுக்கு பெருமளவில் பணம் விரயம் ஆகிறது.

நாகர்கோவில் - திங்கள்சந்தை வழித்தடத்தில் ஆலங்கோட்டை, புதூர், சூரப்பள்ளம், ஈத்தன்காடு வழியாக 12 கே, 12 ஜி, 12 எம் உள்ளிட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் இந்த பஸ்கள் இவ்வழித்தடத்தில் 8 மாதமாகிய பின்னரும் இதுவரை மீண்டும் இயக்கம் தொடங்கப்படவில்லை. இதே போன்ற நிலைதான் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களில் உள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணமாக பொதுமக்கள் சமூக இடைவெளியின்றி நடமாடுதல், முக கவசம் அணியாமல் இருத்தல் போன்றவை உள்ளது. அதே வேளையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று சற்று குறைந்துள்ள போதிலும் அதன் தாக்கம் நீடித்து வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான அலட்சியம் தொடர்கிறது. இதன் காரணமாகவே தற்போது தொற்று பரவல் ஏற்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் கிராமப்புற பகுதிகளுக்கும் அரசு பஸ் போக்குவரத்தை குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சில டிரிப்புகளையேனும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : spread ,villages ,public , Corona, bus for 8 months, hamlets, public
× RELATED லாரியை வழிமறித்து கரும்பு ருசித்த காட்டு யானை