×

கடலாடி அருகே சிகரெட், புகையிலை விற்க தடை போட்ட கிராமம்

சாயல்குடி: கடலாடி ஒன்றியம் பொதிகுளம் பஞ்சாயத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் விவசாயம், ஆடு வளர்த்தல் முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் நூறு நாள் வேலைக்கு சென்று வருகின்றனர். இக்கிராமத்திலுள்ள பெட்டி கடைகளில் சிகரெட், அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை, குட்கா போன்ற பொருட்கள் விற்கவும், மது உள்ளிட்ட உடலுக்கு தீங்கு விளைவிக்கின்ற பொருட்களை கிராமத்திற்குள் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளனர். இதனைத் தெரிவிக்கும் வகையில் கோயில் மைக்செட் மூலம் தகவல் சொல்லியும், சுவரொட்டிகளை ஒட்டியும் விளம்பரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், `` கிராமத்தில் விவசாயம், ஆடு வளர்த்தல் மட்டுமே முக்கிய தொழிலாக உள்ளது. பெரும்பாலோனோர் கூலி வேலைக்கு சென்று குடும்பங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிலர் சிகரெட், மது போன்றவற்றிற்கு அடிமையாகி வீண் செலவுகளை செய்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு சிகரெட், மது, புகையிலை பயன்படுத்த தடைவிதித்து கிராம கூட்டத்தில் முடிவு செய்து, அதனை தீர்மானமாக இயற்றியுள்ளோம். மேலும் கோயில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட அனைத்து சுபநிகழ்ச்சிகள் முதல் இறப்பு நிகழ்ச்சிகளுக்கு வெளியூர்களிலிருந்து வருவோருக்கும் இந்த தடையை விதித்து, அவர்கள் பார்வைக்காக விழிப்புணர்வு வாசக நோட்டீஸ்களை ஒட்டியுள்ளோம்’’ என்றனர்.

Tags : Village ,Kataladi , Seafarer, Cigarette, Tobacco, Ban, Village
× RELATED கல் குவாரி திட்ட கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு