×

திருப்பத்தூர் நகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக 8 பேர் உயிரை பலிவாங்கிய பாதாள சாக்கடை பள்ளங்கள்

* ரூ. 134 கோடியில் நடக்கும் ஆமைவேக பணிகளால் மக்கள் கடும் அவதி

திருப்பத்தூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் நகராட்சியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகரப் பகுதியில் மட்டும் சுமார் 1 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள சுமார் 80,000 குடியிருப்புகளுக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர அரசு அனுமதி வழங்கியது.
இதற்காக ₹134 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2015ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்கு டெண்டர்விடப்பட்டது. 2 ஆண்டுகளில் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிடப்பட்டிருந்தது.

36 வார்டுகளில் பணிகள் தொடங்கப்பட்டு. 89 கிலோமீட்டர் சாலைகள், பாதாள சாக்கடை திட்ட பணிகள் பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 5 ஆண்டுகளை கடந்து பணிகள் முடிக்காமல் ஆமைவேகத்தில் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பாதாள சாக்கடை திட்டத்திற்காக ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. பணிகள் நடைபெறும் இடங்களில் விபத்து பிரதிபலிப்பான் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படாத காரணத்தினால். இரவு நேரங்களிலும், பகல் நேரங்களிலும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தான பள்ளத்தில் விழுந்து உயிரிழந்து வருகின்றனர்.  

இப்படி பாதாள சாக்கடை பள்ளத்தில் விழுந்து ராணுவவீரர் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். பாதாள சாக்கடை பள்ளங்கள் உயிர்பலி வாங்கும் பள்ளமாக மாறியதால் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பலமுறை போராட்டங்கள் நடத்தியுள்ளனர். வணிகர் சங்கங்கள்,  வர்த்தக சங்கங்கள், உள்ளிட்ட அனைத்து வியாபாரி சங்கத்தினர் கடையடைப்பு, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடத்தி வந்தனர். ஆனாலும் அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. அதன் பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு மாவட்டத்தின் வளர்ச்சி திட்டப் பணிகளில் மாவட்ட கலெக்டர் சிவன்அருள் துரிதமாக செயல்பட்டு வந்தார்.

முதன்முதலில் திருப்பத்தூரில் உள்ள முக்கிய பிரச்சனையான பாதாள சாக்கடை பிரச்னையை விரைவில் முடிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஆமை வேக பணிகள் சற்று வேகமெடுத்தது. பின்னர் கொரோனா ஊரடங்கால் பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. தளர்வுகள் அறிவித்த பின்னர் மீண்டும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இப்படி திருப்பத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஆமைவேகத்தில் உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிவடைந்த பகுதிகளில் சாலைகள் அமைக்கப்படாததால் நகரப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான இடங்களில் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கிநிற்கிறது. இதனால் பொதுமக்கள் நோய்பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாக தினமும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாதாள சாக்கடை திட்ட பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் கே.சி.வீரமணி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலெக்டர் தலைமையில் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தியும் தற்போது வரை ஆமைவேகத்திலேயே பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக கோட்டைத் தெரு, ஆரிப் நகர், அவ்வை நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 கிலோமீட்டர் சாலைகள் அமைக்கப்படாததால், அனைத்தும் பகுதிகளும், சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் அப்பகுதியில் அத்தியாவசிய தேவைக்கு செல்லும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களுடன் சேற்றில் சிக்கி விழுந்து, எழுந்து செல்லும் நிலையாக உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை, அந்த மனுக்கள் குப்பை தொட்டிக்கு போவதாக புகார்கள் தெரிவிக்கின்றனர் எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு கூட்டத்தை நடத்தி பணிகளை துரிதப்படுத்த, குடிநீர்வடிகால்வாரியத்திற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டு, வீடுகளுக்கு பாதாள சாக்கடை திட்ட இணைப்புகளை வழக்க விரைவான நடவடிக்கை எடுத்து. உயிர்பலியாகும் பொதுமக்களின் உயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து, சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பணிகள் முடியும் தருவாயில் உள்ளது
திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் கூறுகையில், ‘திருப்பத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடந்து வருகிறது. நகராட்சி பணிகளானது, பாதாள சாக்டை திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்தி கொடுப்பது உள்ளிட்டவை தான். தற்போது இந்த பணிகளானது, முடிவடையும் தருவாயும் உள்ளது. குடிநீர் வடிகால் வாரியம் மூலம் அனைத்து வீடுகளுக்கு பாதாள சாக்டை இணைப்பு கொடுத்த பின்னர், அனைத்து பகுதிகளுக்கும் சாலைவசதி செய்யப்படும். என்றார்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் குளறுபடிகள் வெளிவரும்
இதுகுறித்து திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ நல்லதம்பி கூறுகையில், ‘இந்த திட்டமானது அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம். திருப்பத்தூர் நகராட்சிக்கு திமுக ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 6 ஆண்டுகளுக்கு முன்பாக இருந்து தொடங்கி நடந்து வருகிறது. பலமுறை பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஒருங்கிணைந்த மாவட்டமாக இருக்கும்போதும் கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

பாதாள சாக்கடை திட்ட ஆய்வு கூட்டத்திற்கு அரசு அதிகாரிகளும், ஆளும்கட்சியினரும் என்னை அழைக்காமல் புறக்கணித்து, ஒருதலைப்பட்சமாக கூட்டங்களை நடத்தி பணிகளை மேற்கொள்வதாக விளம்பரப்படுத்திக் கொண்டனர். பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லாததால் என் சொந்த செலவில் ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய்களை நானே தூர்வாரி கழிவுகளை அகற்றினேன். அதேபோல பாதாள சாக்கடை திட்ட பணிகள் விரைந்து முடிக்க பல முறை மக்களுடன் சேர்ந்து போராட்டங்களை நடத்தி உள்ளேன். கண்துடைப்புக்காக இந்த அரசு பாதாள சாக்கடை திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டு வந்து அதனை முழுமையாக செயல்படுத்தாமல் உள்ளது என்பது வேதனை அளிக்கிறது. மீண்டும் திமுக ஆட்சி அமையும் போதுதான் இந்த பணிகளில் உள்ள குளறுபடிகள் மற்றும் இதில் கொள்ளையடிக்கப்பட்ட விஷயங்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு வெளிவரும். இவ்வாறு அவர் கூறினார்.

3 மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும்
இதுகுறித்து கலெக்டர் சிவன் அருள் கூறுகையில், ‘திருப்பத்தூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடைகள் திட்ட பணிகள் முடிக்க பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, தற்போது இந்த பணிகள் விரிவடைந்து வருகிறது. 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துவிட்டது. இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்ட பின்னர் சாலை அமைக்கும் பணி நடைபெறும். இப்பணிகள் துரிதமாக முடிக்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில் முடிய வேண்டிய திட்டம் கொரோனாவால் தடைபட்டுவிட்டது.

மேலும் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக நகரத்தில் உள்ள அனைத்து மக்களும் ஒத்துழைப்பு அளித்தனர். ஊர் கூடி தேர் இழுத்தால் நகரும் என்பதுபோல இந்த பணிகள் அனைத்து தரப்பு மக்களின் நல்லாதரவை பெற்றதனால் தற்போது 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் பணிகள் தற்போது முடிவடைந்து விடும். சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சோதனை ஓட்டங்கள் முடிந்த பின்பு அனைத்து வீடுகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டு 3 மாதங்களில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்’ என்று தெரிவித்தார்.

Tags : municipality ,Tirupati , Tirupati, 8 killed, victim, underground sewer
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...