×

தினமும் திண்டாடும் மக்கள் பஸ் ஸ்டாண்ட் இல்லாத நெல்லை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக அனைத்தும் காலி

நெல்லை: தென் மாவட்டங்களில் முக்கிய நகரமாக நெல்லை திகழ்கிறது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் நெல்லைக்கு தினமும் வந்து செல்வோர் அதிகம். இதனால் நெல்லை மாநகரத்தின் முக்கிய வீதிகளான எஸ்என் ஹைரோடு, வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, பைபாஸ் சாலைகள் எப்போதும் போக்குவரத்து ெநரிசல் மிகுந்து காணப்படும்.

நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போக்குவரத்து ெநரிசலை கருத்தில் கொண்டு நெல்லை வேய்ந்தான்குளத்தில் கடந்த 2003ம் ஆண்டு முன்பு புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் நகர பஸ்கள் மட்டுமே வந்து செல்லும் வகையில் மாற்றப்பட்டு, புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறநகர் பஸ்கள் அனைத்தும் இயங்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால் நெல்லை சந்திப்பு, புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகிய 2 பஸ் ஸ்டாண்டுகளுமே இன்று இல்லை. காணாத குறைக்கு உள்ளூர் பஸ்கள் வந்து சென்ற பாளை. பஸ் ஸ்டாண்டும் இல்லை.

இப்படி ஒரே நேரத்தில் 3 பஸ் ஸ்டாண்டுகளை மூடி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நெல்லை சந்திப்பு பஸ் ஸ்டாண்ட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் மூடப்பட்டது. நெல்லை சந்திப்பில் ரூ.78 கோடியில்  அமைக்கப்படும் 3 அடுக்கு மாடி புதிய பஸ் நிலையத்திற்கு தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டினார். 18  மாதங்களுக்குள் இந்த பஸ் ஸ்டாண்டை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அப்போது கூறப்பட்டது.

ஆனால் 2 ஆண்டுகள் நெருங்கும் வேளையில் கம்பிகள் மட்டுமே வெளியே நீட்டிக் கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சந்திப்பு பஸ் ஸ்டாண்ட் பணிகளே திணறடிக்கும் நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நெல்லை புதிய பஸ் ஸ்டாண்டையும் திடீரென மூடி விட்டனர். இங்கும் மாடியில் வணிக வளாகம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், அபிவிருத்திப் பணிகள் நடைபெறும் மூடப்படுவதாக மா நகராட்சி நிர்வாகம் அறிவித்தது. இதனால் புதிய பஸ் ஸ்டாண்ட் மூடப்பட்டு வாயிலில் மண் மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது.

அப்போது கொ ரோனா தடுப்பு நடவடிக்கை என்பதால் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் கடந்த ஒரு மாதமாக அனைத்து வழித்தடங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே நெருக்கடியில் சிக்கித் தவித்த நெல்லை புதிய பஸ் ஸ்டாண்டில் தற்போது கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையை பொறுத்தவரை புதிய பஸ் ஸ்டா ண்டில் 1வது மற்றும் 4வது நடைமேடை மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. 2, 3 நடைமேடை பகுதி முழுவதும் மூடப்பட்டு பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற பஸ்கள் அருகில் ஆம்னி பஸ் நிலையத்திற்காக அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்டிற்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில் எந்த பஸ்கள் எங்கே நிற்கும் என்பது கூடத் தெரியாமல் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் சிரமப்படுகின்றனர். 4 நடைமேடைகளில் இருந்து பஸ்கள் புறநகர்களுக்கு இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2 நடைமேடைகள் மட்டுமே செயல்படுவதால் சமூக இடைவெளி காற்றில் பறந்து விடுகிறது.

இப்படி ஒரே நேரத்தில் நடக்கும் 3 பஸ் ஸ்டாண்ட்களின் பணிகளால் பொதுமக்கள் பஸ் ஸ்டாண்ட்களில் வெயிலில் காயும் நிலை உள்ளது. அக்.18ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கி விடும். மழைக் காலம் தொடங்கி விட்டால் நெல்லை சந்திப்பிற்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள பொருட்காட்சி திடல் பஸ் நிலையம், பெருமாள்புரம் தற்காலிக பஸ் நிலையம் ஆகியவற்றில் மழை நீர் குளம்போல் தேங்கி விடும். இதனால் பொதுமக்கள் மேலும் சிரமங்களுக்கு உள்ளாவர். ஒரே நேரத்தில் நடந்து வரும் இந்தப் பணிகள் எப்போது முடிந்து பஸ் நிலையம் முழு பயன்பாட்டிற்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதுகுறித்து நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலைய வியாபாரிகள் சங்க செயற்குழு உறுப்பினரும், தேமுதிக தலைமை செயற்குழு உறுப்பினருமான ஆனந்தமணி கூறுகையில், தற்போதைய நிலையில் நெல்லையில் எந்த பஸ் ஸ்டாண்டும் இல்லை. கொரோனா முடக்கம் காரணமாக 6 மாதங்களாக புதிய பஸ் ஸ்டாண்ட் மூடப்பட்டதால் வியாபாரிகள் அனைவரும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். தற்போது புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படும் சூழ்நிலையில் 2, 3வது பிளாட்பாரங்கள் மூடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகளை 3 மாதங்களில் முடித்து விடுவதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியது. தற்போது ஒரு மாதம் முடிந்து விட்டது. இன்னும் 2 மாதங்களில் பணிகள் முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அரசு அலுவலர்கள் ஓட்டம்
தேசிய அரசு அலுவலர் கூட்டமைப்பு அகில இந்திய துணைத் தலைவர் சீதாராமன் கூறுகையில், நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்டத்தை செயல்படுத்துவது வரவேற்கக் கூடியதுதான். எனினும் ஒரே நேரத்தில் 3 பஸ் நிலையங்களையும் மூடியதால் அரசு, தனியார் ஊழியர்கள் சிரமத்திற்குள்ளாக வேண்டியுள்ளது. குறிப்பாக புதிய பஸ் ஸ்டாண்டில் 2 நடைமேடைகள் மூடப்பட்டதால் அரசு அலுவலர்கள் பணிக்குச் செல்லும் போதும், திரும்பும் போதும் புதிய பஸ் ஸ்டாண்டிற்கும், அருகில் உள்ள ஆம்னி பஸ் ஸ்டாண்டிற்கும் மாறி மாறி ஓட்டமும், நடையுமாக செல்ல வேண்டியுள்ளது. இதனால் காலவிரயம் ஏற்படுகிறது. எனவே புதிய பஸ் ஸ்டாண்டின் முக்கியத்துவத்தை உணர்ந்து விரைந்து பணிகளை முடித்து அனைத்து நடைமேடைகளையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மெருகேறுகிறது நெல்லை  
நெல்லை மாநகராட்சி கமிஷனர் கண்ணன் கூறுகையில், ‘‘நெல்லை மாநகராட்சியில் தற்போது பஸ் நிலையங்களில் புதிய கட்டுமான பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தை பொருத்தவரையில் வரும் டிசம்பருக்குள் பணிகள் நிறைவு பெற்று, அங்கு பஸ்கள் வந்து செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். மேல்தள பணிகள் அதன் பின்னர் மேற்கொள்ளப்படும். சந்திப்பு பஸ்நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் ஐகோர்ட் வழக்குகள், கொரோனா காலத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் காலதாமதம் ஆனது. தற்போது அங்கு முழுவீச்சில் பணிகள் நடக்கின்றன.

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் 6 மாத காலத்திற்குள் பணிகள் நிறைவுறும். அதன் பின்னர் பஸ்கள் ஒவ்வொரு நடைமேடையாக அனுமதிக்கப்படும். பாளை பஸ்நிலையத்தில் பணிகளை நிறைவு செய்ய ஓராண்டு காலக்கெடு நிர்ணயித்து, கடந்த மாதம் பணிகளை தொடங்கினோம். அடுத்தாண்டு ஆகஸ்டில் அங்கு பணிகள் நிறைவுபெறும். தற்போது நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை கணக்கில் கொண்டால் நெல்லை மாநகராட்சி மெருகேறுகிறது என்று உறுதியாக கூறலாம்’’ என்றார்.


Tags : People Bus Stand, Nellai, Smart City,
× RELATED திருத்தப்பட்ட ஆண்டு திட்ட அட்டவணையை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.