×

கொரோனா பரவல் காரணமாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் லோக் அதாலத்: 4,468 வழக்குகளில் தீர்வு கண்டு சட்டப்பணிகள் ஆணையம் சாதனை

சென்னை: வீடியோ கான்பரன்ஸ் மூலம் லோக் அதாலத் நடத்தி 4,468 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு 83 கோடியே 6 லட்சத்து 71,704 பைசல் செய்து சட்டப் பணிகள் ஆணையம் புதிய சாதனையை படைத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் லோக் அதாலத் மூலம் தீர்த்து வைக்கக்கூடிய வழக்குகளை 3 மாதங்களுக்கு ஒரு முறை தேசிய அளவிலான லோக் அதாலத்துக்களை நடத்த தேசிய சட்டப் பணிகள் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் கடந்த சில ஆண்டுகளாக அனைத்து மாநிலங்களிலும் தேசிய லோக் அதாலத்துகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தமிழகத்தில் நேற்று லோக் அதாலத் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக லோக் அதாலத்தை நேரடியாக நடத்த முடியாத காரணத்தால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் மொத்தம் 4,468 நிலுவை வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்திலும் தீர்வு காணப்பட்டு 83 கோடியே 6 லட்சத்து 71,704 பைசல் செய்யப்பட்டது. இந்த லோக் அதாலத்தை சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியும் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயல் தலைவருமான வினீத் கோத்தாரி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் செயலர் கே.ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக லோக் அதாலத் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதலில் கர்நாடகாவில் நடந்தது. அதையடுத்து, தமிழகத்தில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Lok Adalat ,video conference ,corona spread ,Legal Services Commission , Corona, Lok Adalat, Legal Services Commission
× RELATED ‘இ-லோக் அதாலத்’ மூலம் 2.51 லட்சம் வழக்கு...