×

ரங்கநாதன் தெரு சாலை பணிக்காக தோண்டிய பள்ளத்தை மூட ‘சி’ கேட்கும் ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்: வணிகர்கள் குமுறல்

சென்னை: தி.நகர் ரங்கநாதன் தெருவில் சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை மூட ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர் கமிஷனாக ‘பல சி’ கேட்பதாக வணிகர்கள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னையில் உள்ள வணிக பகுதிகளில் தி.நகர் மிக முக்கியமானது. இங்கு ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளன. தினசரி லட்சகணக்கான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தினசரி வந்து செல்கின்றனர். ஒரு நாள் வர்த்தகம் பல நூறு கோடிகளை எட்டும். இந்நிலையில் தி.நகர் ரங்கநாதன் தெருவில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இதனால் அந்த பகுதியில் பல இடங்களில் பள்ளம் ேதாண்டப்பட்டுள்ளது. பல இடங்களில் கட்டுமானப் பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. வியாபாரிகள் பொருட்கள் மற்றும் கடைக்கு தேவையான சரக்குகளை இரவில் லாரிகள் மற்றும் வேன்களில் எடுத்துக் கொண்டு கடைகளுக்கு வருவது வழக்கம்.

தற்போது பள்ளம் தோண்டி போடப்பட்டுள்ளதால், வாகனங்கள் எளிதில் தெருவுக்குள் சென்று பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மெயின் ரோட்டில் வாகனத்தை நிறுத்தி ஆட்களை வைத்து பொருட்களை எடுத்துச் செல்லும் நிலை தற்போது உருவாகியுள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதிகாரிகள் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆளும் கட்சி விஐபி ஒருவர் உத்தரவிட்டால்தான் சாலைகளை போட முடியும் என்று கை விரித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்த பள்ளத்தை மூட ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரை வியாபாரிகள் சந்தித்தபோது, அவர் ‘‘பல சி’’ கேட்பதாக வணிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பள்ளத்தை மூடாமல் இருந்தால் எங்களால் எளிதில் பொருட்களை கொண்டு செல்ல முடியாது. எனவே இதை பயன்படுத்தி கொண்ட அந்த பிரமுகர் குறிப்பிட்ட ‘சி’ அளித்தால் பள்ளம் மூடப்படும் என்று கூறுவதாகவும், இல்லை என்றால் அது மூடவே படாது என்றும் அந்த பிரமுகர் கூறியதாக வணிகர்கள் தெரிவித்தனர்.

Tags : party ,Merchants ,Ranganathan Street , Chennai, merchants
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...