×

ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக் துவக்கம்: 800 விசைப்படகுகள் கரையில் நிறுத்தம்

ராமேஸ்வரம்: நடுக்கடலில் விழுந்து காணாமல் போன மீனவரை மீட்க, மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கினர். இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டது. ராமேஸ்வரத்திலிருந்து கடந்த செப்.30ம் தேதி மீன்பிடிக்க சென்ற தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் கார்சன் படகில் இருந்து கடலில் தவறி விழுந்தார். மாயமான மீனவரை இந்திய கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாக சக மீனவர்கள் படகில் சென்று தேடி வந்தனர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் காணாமல் போன மீனவரை  மத்திய, மாநில அரசுகள் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் மீன் பிடிக்க செல்லாமல் காலவரையற்ற ஸ்டிரைக்கை தொடங்கியுள்ளனர். இதனால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் ராமேஸ்வரம்,  தனுஷ்கோடி பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று வழக்கம் போல் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் மூன்று விசைப்படகுகளில் கார்சனின் உறவினர்கள், மீனவர்கள் அடங்கிய குழுவினர் நேற்று 3வது நாளாக பாக்ஜலசந்தி கடலில் தேடிச் சென்றனர். அதேநேரம் இலங்கை கடல் பகுதியிலும் அந்நாட்டு கடற்படையினர் கார்சனை தேடிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Rameswaram ,fishermen strike , Rameswaram, Fishermen, Strike
× RELATED கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க...