×

முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு செக் வைக்க முடிவு? பெரியகுளம் பண்ணை வீட்டில் எம்எல்ஏக்கள், நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை: அமைச்சர் உதயகுமார், கொங்கு மண்டலத்தில் இருந்து வந்தவர்களால் பரபரப்பு

பெரியகுளம்: தனது பலத்தைக் காட்டத் தொடங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் அமைச்சர் உதயகுமார், 4 எம்எல்ஏக்கள், ஆதரவாளர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவரை  திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்த சர்ச்சை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இடையே ‘பனிப்போர்’ நிலவி வருகிறது. பரபரப்பான இந்த அரசியல் சூழலில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு 7.45 மணியவில் சொந்த ஊரான தேனி மாவட்டம், பெரியகுளத்திற்கு காரில் வந்தார். அவரை தேனி மாவட்ட அதிமுக செயலாளர் சையதுகான், கம்பம் எம்எல்ஏ ஜக்கையன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். இதை தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்து சந்தித்து பேசினர். முன்னதாக, சென்னையில் இருந்து பெரியகுளம் வரும் வழியில் விழுப்புரம், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது விழுப்புரம், திருச்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை அழைத்து, எடப்பாடி ஆதரவாளர்களுக்கு எப்படி செக் வைக்க வேண்டும். அடுத்த கட்ட நகர்வு, திடீரென எதிர்பாராத பிரச்னை ஏற்பட்டால் சமாளிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து ஆதரவாளர்களுக்கு ‘புதிய அசைன்மென்ட்’ கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் ஓபிஎஸ் நேற்று முன்தினம் இரவு பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்று தங்கினார். நேற்று காலை 11 மணி முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அவரை திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம், விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஆணையூர் ஊராட்சி எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ராஜசேகரன், சிவகங்கை மாவட்ட துணைச்செயலாளர் கருப்பையா, விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற மாநில பொதுச்செயலாளர் முனீஸ்வரன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மீனவர் அணி ஆகியோர் ஊராட்சி கலந்து கொண்டனர்.


துணைத்தலைவர் எல்பின்ஸ்டன், சிவகங்கை மாவட்ட கவுன்சிலர் சின்னையா அம்பலம், விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் நாகராஜன், அருப்புக்கோட்டை நகர மகளிர் அணி செயலாளர் பிரேமா, திருவண்ணாமலை மகளிர் அணி வடக்கு மாவட்ட செயலாளர் இந்திரா பாலமுருகன் உட்பட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சந்தித்தனர். அவர்களிடம் ஓபிஎஸ் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், நேற்றிரவு அமைச்சர் உதயகுமார் திடீரென மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், சோழவந்தான் எம்எல்ஏ மாணிக்கம், உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, மேலூர் எம்எல்ஏ பெரியபுள்ளான் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் சென்று சந்தித்தார். இந்த ஆலோசனை ஒரு மணி நேரம் நீடித்தது. தற்போது மதுரை மாவட்ட எம்எல்ஏக்கள் மட்டுமே வந்து சந்தித்துள்ளனர். விரைவில் மேலும் சில எம்எல்ஏக்களுடன் அவரது ஆதரவாளர்கள் பேசி வருகின்றனர். அவர்களும் ஓரிரு நாளில் ஒவ்வொருவராக சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்எல்ஏக்கள் தொடர்ந்து அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருவது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வருகிற 7ம் தேதிக்குள் 11 பேர் கொண்ட வழிகாட்டும் குழுவை அமைத்தால் மட்டுமே பேச்சு வார்த்தைக்கு சம்மதிப்பேன். இல்லாவிட்டால் முதல்வர் வேட்பாளர் அறிவிப்புக்கு நான் வரமாட்டேன் என்று உறுதியாக, மூத்த தலைவர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். இதனால் 7ம் தேதிக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால், அதிமுகவில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. இதற்கிடையில், தேனி மாவட்டம், நாகலாபுரத்தில் நாளை காலை அரசு கடனுதவி வழங்கும் விழாவிலும், அரசு செல்போன் வழங்கும் விழாவிலும் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார். சென்னைக்கு வருவது குறித்து அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால், முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட வரும் 7ம் தேதி அவர் சென்னைக்கு வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை துணை முதல்வர் இல்லாமல், முதல்வர் வேட்பாளரை அறிவிக்கலாமா என்பது குறித்தும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் 7ம் தேதி நெருங்குவதால், அதிமுகவில் என்ன நடக்கும் என்ற பரபரப்பு எழுந்துள்ளது. இதனால் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் பற்றிய அறிவிப்புக்களை வெளியிடாமல் சமரசம் ஏற்பட்ட பிறகு அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் நாளுக்கு நாள் பரபரப்பு கூடி வருவதால் என்ன நடக்கும் என்பது தெரியாமல் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.

பெரியகுளத்தில் மதுரை மாவட்ட எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஓபிஎஸ்சை சந்தித்து விட்டு அமைச்சர் உதயகுமார் திரும்பியபோது, நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உசிலம்பட்டியில் மூக்கையா தேவர் சிலை நிறுவிட, தேனி எம்பி ரவீந்திரநாத் வாக்குறுதி அளித்திருந்தார். இதற்காக உசிலம்பட்டிக்கு நேரில் சென்று, ஏற்கனவே தேவர் சிலை உள்ள இடத்திற்கு அருகாமை இடம் ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்கான ஆலோசனைக்காகவே ஓபிஎஸ்சை சந்தித்தேன்’’ என்றார். முதல்வர் வேட்பாளர் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதா என  கேட்டதற்கு, ‘‘அம்மாவின்(ஜெயலலிதா) கட்டளையால், ஆண்டவன் கட்டளையால் அனைவரும் ஒன்றுபட்டு மீண்டும் அவரது ஆட்சியை தமிழகத்தில் மலர வைக்க பாடுபடுவோம்.. மறுபடியும் மறுபடியும் கேள்வி கேட்டு சிக்கலாக்காதீர்கள்’’ எனக்கூறி சிரித்தபடியே கிளம்பிச் சென்றார். புரட்டாசி 3ம் சனிக்கிழமை என்பதால், நேற்றிரவு பெரியகுளத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்கு ஓபிஎஸ் சென்று, சாமி தரிசனம் செய்தார்.

அணி திரட்டும் படலம் தீவிரம்
தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களுடன், விரைவில் ஆலோசனை நடத்த ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டுள்ளார். ஓரிரு நாட்களில் தென்மண்டல நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் அணி திரட்டும் படலம் ஆரம்பமாகி உள்ளது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரியகுளம் வந்தது ஏன்?
முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் முதல்வரும், துணை முதல்வரும் நேரடியாக மோதி கொண்டனர். தொடர்ந்து சென்னையில் தங்கி தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். ஓபிஎஸ்சின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் ஆதரவாளர்களுடன் பேசிய விவரங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உடனே தெரிந்து விடுகிறதாம். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம், சொந்த ஊரான பெரியகுளத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : candidate announcement ,CM ,executives ,OPS consultation ,farm house ,Udayakumar ,Periyakulam ,zone ,Kongu , Chief Candidate, OPS, Consulting
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!