×

சேலத்தில் பொதுமக்கள் போராட்டம்: ரசாயன கழிவு நீரை வெளியேற்றிய ஆவின் பால் பண்ணை முற்றுகை

சேலம்: ரசாயனம் கலந்த கழிவுநீரை வெளியேற்றுவதாக கூறி, சேலம் ஆவின் பால் பண்ணையை முற்றுகையிட்டு பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் இரும்பாலை ரோடு தளவாய்ப்பட்டியில் உள்ள ஆவின் பால்பண்ணையில் இருந்து ரசாயனம் கலந்த கழிவுநீரை வெளியிடுவதாகக் கூறி அங்கு நேற்று 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  திரண்டு முற்றுகையிட்டனர். பின்னர் திடீரென, நுழைவாயில் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:ஆவின் நிறுவனத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கவும், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தூய்மைப்படுத்தவும் பல்வேறு விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கழிவு நீர் ஆவின் வளாகத்தில் தேக்கி வைக்கப்படுகிறது. மழைநீரும் அதனுடன் கலந்து, சுமார் 20 அடி அளவுக்கு கழிவு நீர் தேங்கி நிற்கிறது.

இப்பகுதியில் மழை வரும் பொழுது, அந்த கழிவு நீரை வெளியே விடுவதை  வழக்கமாக கொண்டுள்ளனர். இவை, பால்பண்ணைக்கு பின்புறம் உள்ள ரொட்டிக்கார வட்டம், நடையவட்டம், காத்தவரயான் கோயில், மீன்வாயன் ஓடை, நாகர்கோயில் வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. அங்குள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படுவதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், மக்களுக்கு தோல் சம்பந்தமான பிரச்னையை ஏற்படுத்துகிறது. வயல் வெளியில் கழிவு நீர் புகுவதால் நெல், சோளம், ராகி போன்ற பயிர்கள் பாதிக்கப்படுகிறது. கடந்த இருதினங்களாக பெய்த மழையால், தற்போதும் கழிவுநீர் வெளியேறி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய இரும்பாலை போலீசார், ஆவின் அதிகாரிகளை பாதிக்கப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்று பார்வையிட்டனர்.  பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

Tags : protest ,dairy farm ,Salem , Online, Operation Salem, Spirit Dairy, Siege
× RELATED அர்ஜெண்டினாவில்...