×

அங்கீகாரத்தில் பாலின பாகுபாடு கூடாது: மருது சகோதரர்களின் பெண் வாரிசுகளுக்கு பென்ஷன்: ஐகோர்ட் மதுரை கிளை

மதுரை: வாரிசு அங்கீகாரத்தில் பாலின பாகுபாடு கூடாது என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, மருது சகோதரர்களின் பெண் வாரிசுகளுக்கு பென்ஷன் வழங்க உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே சூடியூரைச் சேர்ந்த கனகா, மரகதம், ராஜேஸ்வரி ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை மருது சகோதரர்கள் தந்துள்ளனர்.  அவர்களது வாரிசுகளுக்கு அங்கீகாரம் அளித்திடும் வகையில் அரசால் பென்ஷன் வழங்கப்படுகிறது. மருது சகோதரர்களின் வாரிசுகளான நாங்களும் பென்ஷன் கேட்டு விண்ணப்பித்தோம். எங்கள் விண்ணப்பத்தை நிராகரித்து ராமநாதபுரம் கலெக்டர் கடந்த 2017ல் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவை ரத்து செய்து, எங்களுக்கு பென்ஷன் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார்.

மனுதாரர்கள் வக்கீல் கே.மகேந்திரன் ஆஜராகி, ‘‘மனுதாரர்கள் போதுமான சான்றிதழ் பெற்றுள்ளனர். இவர்களின் முந்தைய வாரிசுதாரர்களுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது. மனுதாரர்களின் சகோதரர்கள் பென்ஷன் பெறுகின்றனர். பெண்கள் என்ற காரணத்திற்காக மறுக்க முடியாது’’ என வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கடந்த 18ம் நூற்றாண்டில் நாட்டின் விடுதலைக்காக மருது சகோதரர்கள் சமரசமின்றி போராடியுள்ளனர். இவர்களது தியாகத்தை போற்றிடும் வகையில் அவர்களது வாரிசுகளுக்கு பென்ஷன் வழங்கப்படுகிறது.   மனுதாரர்களின் சகோதரர்களது பெயர் 202 பேர் பட்டியலில் உள்ளது. மனுதாரர்களின் பெயர்களை சேர்க்காதது சரியானதல்ல. வாரிசு அங்கீகாரத்தில் பாலின பாகுபாடு கூடாது. எனவே, மனுதாரர்களுக்கு பென்ஷன் வழங்க மறுத்த கலெக்டரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த விவகாரம் அரசியல் ஓய்வூதிய பொதுத்துறை செயலர் கவனத்திற்கு மீண்டும் அனுப்பப்படுகிறது. மனுதாரர்களும் பென்ஷன் பெறத் தகுதி பெறுகின்றனர். இவர்களும் மருது சகோதரர்களின் வாரிசுகள் என்ற அங்கீகாரத்தை உறுதிபடுத்திடும் வகையில் பென்ஷன் வழங்குவது தொடர்பாக 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Tags : heirs ,branch ,drug brothers ,Madurai , Madurai, highcourt Madurai Branch
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...