படிக்கல் - கோஹ்லி அபார ஆட்டம் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியது ஆர்சிபி

அபுதாபி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. அபுதாபியில் நேற்று மாலை நடந்த இப்போட்டியில், கோஹ்லி தலைமையிலான ஆர்சிபி அணி ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியுடன் மோதியது. ராஜஸ்தான் அணியில் அங்கித் ராஜ்பூத்துக்கு பதிலாக லோம்ரர் இடம் பெற்றார். பெங்களூர் அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற ராயல்ஸ் கேப்டன் ஸ்மித் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். பட்லர், ஸ்மித் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். ஸ்மித் 5 ரன் எடுத்து உடனா வேகத்தில் ஸ்டம்புகள் சிதற கிளீன் போல்டானார். பட்லர் 22 ரன் (12 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சைனி பந்துவீச்சில் படிக்கல் வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி வீரர் சஞ்சு சாம்சன் 4 ரன் மட்டுமே எடுத்து சாஹல் சுழலில் அவரிடமே பிடிபட, ராஜஸ்தான் 4.1 ஓவரில் 31 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. உத்தப்பா 17 ரன், பராக் 16 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஓரளவு தாக்குப்பிடித்த லோம்ரர் 47 ரன் (39 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சாஹல் சுழலில் படிக்கல் வசம் பிடிபட்டார். கடைசி கட்டத்தில் திவாதியா - ஆர்ச்சர் ஜோடி அதிரடியில் இறங்கி ஸ்கோரை உயர்த்தியது. 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன் குவித்தது. திவாதியா 24 ரன் (12 பந்து, 3 சிக்சர்), ஆர்ச்சர் 16 ரன்னுடன் (10 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆர்சிபி பந்துவீச்சில் சாஹல் 4 ஓவரில் 24 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். உடனா 2, சைனி 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 20 ஓவரில் 155 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் இருவரும் துரத்தாஇ தொடங்கினர். பிஞ்ச் 8 ரன் மட்டுமே எடுத்து கோபால் பந்துவீச்சில் எல்பிடபுள்யு முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.அடுத்து படிக்கல்லுடன் கேப்டன் கோஹ்லி இணைந்தார். அபாரமாக விளையாடிய இருவரும் ராயல்ஸ் பந்துவீச்சை சிதறடித்தனர். படிக்கல் 34 பந்தில் அரை சதம் விளாசினார். படிக்கல் - கோஹ்லி ஜோடி 2வது விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்து அணியை வெற்றிப் பாதையில் செலுத்தியது. படிக்கல் 63 ரன் (45 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆர்ச்சர் வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.அதிரடியாக விளையாடிய கோஹ்லி 41 பந்தில் அரை சதம் அடித்தார். ஆர்சிபி அணி 19.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. கோஹ்லி 72 ரன் (53 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), டி வில்லியர்ஸ் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 4 போட்டியில் 3வது வெற்றியைப் பதிவு செய்த ஆர்சிபி அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. சிறப்பாகப் பந்துவீசி 3 விக்கெட் கைப்பற்றிய சாஹல் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Related Stories:

>