×

காய்ச்சல் காரணமாக ராணுவ மருத்துவமனையில் அட்மிட் டிரம்ப் உடல் நிலை மோசமாகிறதா?

வாஷிங்டன்: கொரோனா பாதித்தாலும் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு லேசான காய்ச்சல், சோர்வு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மேல்சிகிச்சைக்காக அவர் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் பருமன், வயது முதிர்வு ஆகியவை மேலும் உடல்நிலை மோசமடைய வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர் கடந்த புதன்கிழமை நடந்த பிரசார நிகழ்ச்சியின் போது அதிபர் டிரம்ப் உடன் சென்றிருந்தார்.  இதனால், டொனால்டு டிரம்பும் (74 வயது) அவரது மனைவி மெலனியா டிரம்ப்பும் கொரோனா பரிசோதனை செய்தனர். அதில்  இருவருக்குமே கொரோனா வைரஸ் தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரும் தங்களை தாங்களே வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று உறுதியானாலும் இருவருக்குமே எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருந்தன. இந்நிலையில், அதிபர் டிரம்பிற்கு நேற்று முன்தினம் முதல் லேசான காய்ச்சல், அத்துடன் சோர்வும் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வருவதால் மேல் சிகிச்சைக்காக அவர் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெள்ளைமாளிகையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட அதிபர் டிரம்ப் வால்டர் ரீட் மருத்துவமனைக்கு சென்றார். தற்போது டிரம்ப்பின் உடல் நிலை சீராக இருந்தாலும், மருத்துவர்களின் கண்காணிப்பு மிகத் தீவிரமடைந்துள்ளது. காரணம், கொரோனாவின் மிக முக்கிய ஆபத்து காரணிகளான வயது முதிர்வு, உடல் பருமன், கொழுப்பு ஆகியவை டிரம்ப்புக்கு இருப்பதுதான்.

எனவே, டிரம்ப்பின் உடல் நிலை மோசமடையுமா அல்லது லேசான பாதிப்புடன் குணமாகி மீண்டு வருவாரா என்பது குறித்து நிபுணர்கள் கூறுவதாவது:
* கொரோனா அறிகுறிகள் பொதுவாக 2 முதல் 14 நாட்களுக்குப் பிறகே தோன்றும்.
* கொரோனா பாதிப்புகள் எதையும் முன்கூட்டியே கணிக்க முடியாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது எந்த அறிகுறியும் இல்லாமல் வருபவர்கள் அடுத்த சில நாட்களில் தீவிரமாக பாதிக்கப்பட்ட உதாரணங்களும் உள்ளன.
* அதிபர் டிரம்ப்பை பொறுத்த வரையில் அவரது வயது முதிர்வு, உடல் பருமன், கொழுப்பு மற்றும் ஆணாக இருப்பது, நோயின் தீவிரத்தை அதிகமாக்க வாய்ப்புகள் உள்ளன.
* அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய புள்ளிவிவரத்தின்படி, 65 வயது முதல் 74 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இளம் வயதினரை காட்டிலும் 7 மடங்கு ஆபத்து அதிகம்.
* வயதானவர்களுக்கு அபாயங்கள் மிக வேகமாக அதிகரிக்கின்றன. இதனால், டிரம்ப்பின் வயது முதிர்வு அதிக ஆபத்தாக பார்க்கப்படுகிறது.
* டிரம்ப்பின் உடல் நிறை குறியீட்டு எண் 30க்கும் அதிகமாக உள்ளது. உடல் பருமனுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருப்பதும் ஒரு காரணமாகும். உடல் பருமனாக இருப்பவர்களுக்கு தடுப்பூசிகளும் முழுமையாக பலனை அளிக்காது.
*  டிரம்ப் கொழுப்பை குறைக்க ஸ்டேடின் மருந்தை உட்கொண்டு வருகிறார். இதுவும் கொரோனா சிக்கலுக்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இவ்வாறு நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதனால், எந்த கட்டத்திலும் அதிபர் டிரம்ப்பின் உடல் நிலை மோசமான கட்டத்திற்கு சென்று விடக் கூடாது என்பதில் மருத்துவர்கள் குழு மிக உன்னிப்பாக இருந்து வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் அதிபர் அதிகாரங்கள் தொடர்ந்து டிரம்ப் இடமே நீடிக்கும் எனவும், அதிபர் பணிகளை அவர் தொடர்ந்து கவனிப்பார் எனவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

என்ன மருந்து தரப்படுகிறது?
அதிபர் டிரம்ப்புக்கு தரப்படும் மருந்து மற்றும் சிகிச்சை குறித்து வெள்ளை மாளிகை டாக்டர் சீன் கான்லே கூறியதாவது:
* அதிபர் டிரம்ப்புக்கு ஆக்சிஜன் தேவைகள் எதுவும் ஏற்படவில்லை. நிபுணர்கள் ஆய்வு செய்த பின், ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்படுகிறது.
* முன்னெச்சரிக்கையாக ரெசினிரோன் பாலிகுளோனல் ஆன்டிபாடி 8 கிராம் டோஸ் ஊசி அதிபருக்கு செலுத்தப்பட்டுள்ளது.  அதோடு, ஜிங்க், விட்டமின் டி, பமோடிடைன், மெலாடோனின் மற்றும் தினசரி ஆஸ்பிரின் மருந்து தரப்படுகிறது.
* அதிபருக்கு காய்ச்சல், சோர்வு இருந்தாலும், ஓய்வெடுத்து உற்சாகத்துடனே காணப்படுகிறார்.
* ரெசினிரோன் தடுப்பூசி பரிசோதனை கட்டத்தில் உள்ளது. இது உடல் நிலை தீவிரமாக மோசமடைவதை தடுக்கக் கூடியது. என்றாலும், இதற்கான பரிசோதனைகள் முழுமையாக இன்னும் முடியவில்லை.
* ரெசினிரோன் மருந்து நிறுவனம் கண்டுபிடித்த மருந்து எபோலா நோயை சிறந்த முறையில் குணப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மெலனியா
எப்படியிருக்கிறார்?
அதிபர் டிரம்ப்பின் மனைவி மெலானியா டிரம்ப்புக்கு லேசான இருமல், தலைவலி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், அவர் வெள்ளை மாளிகையிலேயே தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். டிரம்ப் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.

வெள்ளை மாளிகையில் தீவிரமாக பரவுகிறது

கடந்த சில மாதங்களாக வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் அதிபர் டிரம்ப், மெலனியா பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 2 செனட்டர்கள், டிரம்ப்பின் முன்னாள் ஆலோசகர், 3 பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், வெள்ளை மாளிகையில் பணியாற்றும் ஊழியர்கள், அவர்களை சார்ந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரைன், துணை அதிபர் பென்சின் ஊடக செயலாளர் கேட்டி மில்லருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

பிடென் பிரார்த்தனை

அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது, ‘‘அதிபர் டிரம்புக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது கொரோனாவின் தீவிரத்தை நினைவூட்டுவதாக உள்ளது. டிரம்ப்பும், மெலனியாவும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,’’ என்றார். முன்னதாக, டிரம்ப்புடன் நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றதால், ஜோ பிடென் மற்றும் அவரது மனைவி ஜில் பிடென் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் இருவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதியானது.

‘நலமுடன் இருக்கிறேன்’

ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் தனது உடல்நிலை குறித்து வெளியிட்ட வீடியோவில், ‘‘எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனைக்கு செல்ல உள்ளேன். நான் நலமுடன் தான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனாலும், அனைத்தும் சரியாக உள்ளது என்பதை உறுதி செய்யவே மருத்துவமனை செல்கிறேன்.  மெலனியாவும்  சிறப்பாகவே உள்ளார். உங்கள் ஆதரவுக்கு நன்றி. நான் இதை மறக்கமாட்டேன்... நன்றி,’’ என தெரிவித்துள்ளார்.

Tags : Trump ,military hospital , Military Hospital, Trump
× RELATED அமெரிக்காவில் ஆபாச பட நடிகைக்கு பணம்...