×

பிரதமர் மோடி திறந்து வைத்தார்: அடல் சுரங்கப்பாதை நாட்டுக்கு அர்ப்பணிப்பு: தேச பாதுகாப்பில் சமரசம் செய்ததாக காங். மீது கடும் தாக்கு

ரோதங்: மணாலி-லே நெடுஞ்சாலையில் கட்டப்பட்டுள்ள உலகின் நீளமான அடல் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் தேச பாதுகாப்பு நலன்களில் சமரசம் செய்யப்பட்டதாக கடுமையாக குற்றம்சாட்டினார். இமாச்சல பிரதேசத்தின் ரோதங் கணவாய் கீழே, மணாலி-லே தேசிய நெடுஞ்சாலையில் 9.02 கிமீ தூரத்திற்கு அடல் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. இது, மலைகளின் மீது 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், உலகில் மிகவும் உயரமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ள, மிகவும் நீளமான சுரங்கப்பாதை என்ற பெருமையை இது பெற்றுள்ளது. ரூ.3,300 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த சுரங்கப்பாதையின் மூலம் மணாலி-லே இடையே 46 கிமீ தூரம் குறைந்து, 4-5 மணி நேர பயண நேரமும் குறைகிறது. சுரங்கப்பாதையை திறந்து வைத்து அதில் பயணம் செய்த பிரதமர் மோடி, சிஸ்சு கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது: அடல் சுரங்கப் பாதை முதல் லடாக்கின் தவுலத் பெக் ஒல்டியில் விமான இறங்கு தளம் அமைப்பது மற்றும் தேஜஸ் போர் விமான உற்பத்தி போன்ற  தேச பாதுகாப்பு நலன் சம்மந்தப்பட்ட பல திட்டங்கள் முந்தைய ஆட்சியில் தாமதப்படுத்தப்பட்டு உள்ளன அல்லது கிட்டத்தட்ட மறக்கடிக்கப்பட்டு உள்ளன.

எந்த நிர்பந்தத்திற்காக, யாருடைய அழுத்தத்தினால் அப்படி செய்யப்பட்டது?

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், கடந்த 2002ம் ஆண்டு இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் வந்த அரசு இந்த திட்டத்தை மறந்தே போனது. 2013-14ம் ஆண்டில் வெறும் 1,300 மீட்டர் தூரத்திற்கே சுரங்கப்பாதை பணி முடிந்திருந்தது. அதே வேகத்தில் சென்றிருந்தால் இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்க இன்னும் 20 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆனால், பாஜ அரசு 2014ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வருடத்திற்கு 300 மீட்டர் கட்டுமான பணி என்றிருந்த பணி வேகத்தை வருடத்திற்கு 1,400 மீட்டராக அதிகரித்தது. இதனால், 26 ஆண்டுகள் ஆக வேண்டிய பணியை வெறும் 6 ஆண்டில் செய்து முடித்துள்ளது. இதே போல், 40-50 ஆண்டாக மூடியே கிடந்த தவுலத் பெக் ஒல்டி விமான இறங்கு தளம் மீண்டும் செயல்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோல், பல ஆண்டாக புறக்கணிக்கப்பட்ட நிறைய திட்டங்களை என்னால் கூற முடியும். வாஜ்பாய் அரசில் திட்டமிடப்பட்ட பீகாரின் கோசி மெகா பாலம் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது.

எனவே, தேச நலன், நாட்டை பாதுகாப்பதை தவிர வேறெதுவும் எங்களுக்கு முக்கியமில்லை. நாங்கள் சொன்னதை செய்வோம் என்பதை நிரூபிப்பதற்கான சான்றுகள் இவை. அதே சமயம், தேச பாதுகாப்பு நலனில் சமரசம் செய்து கொண்ட முந்தைய சகாப்தத்தையும் நம் நாடு பார்த்துள்ளது. அடல் சுரங்கப்பாதை திறப்பின் மூலம் வாஜ்பாயின் கனவு நிறைவேறி இருப்பதோடு, பல ஆண்டுகளாக இம்மாநில மக்களின் காத்திருப்பும் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை இமாச்சல பிரதேசத்திற்கு மட்டுமல்ல, லே-லடாக்கிற்கும் உயிர்நாடியாக இருக்கும். இவ்வாறு மோடி கூறினார். விழாவில், பங்கேற்ற பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த சுரங்கப்பாதை ராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், படையினரையும், ஆயுதங்களையும் வேகமாக எல்லைக்கு நகர்த்த உதவும் என்றும் கூறினார். இந்நிகழ்ச்சியில், இமாச்சல் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர், மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Modi ,country ,tunnel ,Atal ,attack , Prime Minister Modi, Atal Tunnel
× RELATED கொரோனா தடுப்பூசி நாட்டு மக்கள்...