×

ஆத்தூரில் கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரி டெஸ்ட் டியூப்களை சாலையில் போட்ட 2 ஊழியர் டிஸ்மிஸ்

சேலம்: ஆத்தூரில் கொரோனா பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட சளி மாதிரி டியூப்களை சாலையில் போட்டுச் சென்ற 2 தற்காலிக ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து, துணை இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளார். சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் நடந்த காய்ச்சல் பரிசோதனை முகாம்களில் கொரோனா அறிகுறி உள்ள நபர்களிடம் இருந்து சளி மாதிரியை எடுத்து, பரிசோதனை நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம், ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி 1வது வார்டு தண்ணீர்பந்தல் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கொரோனா சளி மாதிரி டெஸ்ட் டியூப்புகள் சிதறிக் கிடந்தன. தகவலறிந்து சுகாதாரத்துறையினர் 8 சளி மாதிரி டெஸ்ட் டியூப்களை எடுத்தனர். மேலும், அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர்.

இதுதொடர்பாக மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் செல்வகுமார் விசாரணை நடத்தினார். அதில், தலைவாசல் பகுதியில் உள்ள 4 கிராமங்களில் நடந்த காய்ச்சல் பரிசோதனை முகாமில், கொரோனா அறிகுறி தென்பட்ட 87 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. அதனை மதியவேளையில், தற்காலிக ஊழியர்கள் சரவணன், செந்தில் ஆகியோர் பைக்கில் எடுத்துக் கொண்டு வந்துள்ளனர். வழியில், 8 சளி மாதிரிகளை தவற விட்டது தெரிந்தது. இதையடுத்து அஜாக்கிரதையாக செயல்பட்ட ஊழியர்கள் இருவரையும் டிஸ்மிஸ் செய்து துணை இயக்குநர் டாக்டர் செல்வகுமார் நேற்று உத்தரவிட்டார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘யாருடைய சளி மாதிரிகள் தவறவிடப்பட்டதோ, அந்த நபர்களிடம் இருந்து மீண்டும் புதிதாக சளி மாதிரி எடுக்கப்பட்டு விட்டது,’’ என்றார்.



Tags : road ,corona test ,Attur , Corona, employee, dismissed
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...