×

தொடங்கியது மழைக்காலம்: குண்டும் குழியுமாக மாறிய சென்னை சாலைகளில் உயிர் பயத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள்

சென்னையில் 387.35 கி.மீ. நீள சாலையில் 471 பேருந்து தடங்கள் உள்ளது. இதைத் தவிர்த்து 5,623 கி.மீ நீள உட்பிரிவு சாலைகளும் உள்ளது. இவற்றில் தார் மற்றும் பேருந்து சாலைகள் உள்ளது. சென்னையில் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட சாலைகள் நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்பட்டுவருகிறது. புறநகர் பகுதிகளில் உள்ள சாலைகள் சம்பந்தபட்ட உள்ளாட்சி அமைப்புகளால் பராமரிக்கப்படுகிறது. இந்த சாலைகள் அனைத்தும் குறிப்பிட்ட இடைவெளியில் சீரமைக்க வேண்டும். இதைத்தவிர்த்து 5 ஆண்டுகளுக்கும் மேல் ஆன சாலைகள் மீண்டும் புதிதாக போட வேண்டும். மேலும் மழைக்காலத்திற்கு முன்பாக சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி, அவை மேலும் சேதமடையும் ஆபத்து உள்ளது. ஆனால் தற்போது சென்னையில் மழைக்காலம் தொடங்கியுள்ள சென்னையில் பல சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சுமத்தி உள்ளனர். குறிப்பாக சென்னையில் உள்ள பல சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாகவும், அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதன்படி சைதாப்பேட்டையில் இருந்து ஆலந்தூர் செல்லும் சாலை, கிண்டி தொழிற்பேட்டை சாலை, எழும்பூர் மாண்டியத் சாலை, திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் சாலை, ஓட்டோரி பிரிக்ளின் சாலை, மாதவரம் நெஞ்சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுன்டானா தண்டையார்பேட்டை இளையமுதலி தெரு, நெடுஞ்செழியன் நகர், நேரு நகர், கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய், ஜெ.ஜெ.நகர், பாரதி நகர், மீனம்பாள் நகர், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ராயபுரம் சோலையப்பன் தெரு, சிமிட்ரி சாலை, கொத்தவால்சாவடி, மண்ணடி, ஏழுகிணறு, சவுகார்பேட்டை மின்ட்தெரு, வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர், ஸ்டான்லி சுரங்க பாதை, தண்டையார்பேட்டை மார்க்கெட் பகுதி, செரியன் நகர், கிராஸ் ரோடு, நேதாஜி நகர், உள்ளிட்ட பகுதியில் சாலைகள் பழுதடைந்து உள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதைப்போன்று மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட புழல் அண்ணா நினைவு நகர் முதல் பிரதான சாலையின் குறுக்கு தெரு மற்றும் ஐந்தாவது தெரு புழல் திருவீதி அம்மன் கோவில் தெரு, லட்சுமி அம்மன் கோவில் தெரு, ஆகிய தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் லேசான மழை பெய்தால் கூட மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கும் மேலும் மேற்கண்ட பகுதிகளில் மழைநீர் கால்வாய் கழிவுநீர் கால்வாய்கள் இல்லாததால் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து தெருக்களில் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதைத் தவிர்த்து ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் பகுதிகளான வாணி விநாயகர் கோயில் தெரு, பள்ளி விநாயகர் கோயில் தெரு, பழைய ஈஸ்வரன் கோயில் தெரு, சரஸ்வதி நகர் , வெங்கடாச்சலம் நகர், மாசிலாமணீசுவரர் நகர், வடக்கு முல்லை நகர், தென்றல் நகர் ஆகிய நகர்களின் குறுக்கு தெருக்கள்,  கோவில்பாதாகை- திருமுல்லைவாயல் சாலை, பட்டாபிராம் குறிஞ்சிமாநகர், கோபாலபுரம் மெயின் ரோடு உள்ளிட்ட சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாகவும், இவற்றில் வாகனங்களை இயக்க முடியாத நிலை உள்ளளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் உள்ள பூந்தமல்லி மிகவும் மேசமான நிலையில் உள்ளது. குறிப்பாக பூந்தமல்லி நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பல நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களை இயக்க மிகவும் சிரமம் உள்ளதாக வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். தற்போது சென்னையில் மட்டும் 2600 சாலைகள் போட திட்ட மிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ஏற்கனவே போடப்பட்ட சாலைகள் போட்ட ஓரிரு நாளில் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. அதைத் தவிர பல சாலைகளில் மின்வாரியம், தொலைத் தொடர்புத்துறை, மாநகராட்சி என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் சாலைகளில், குறுக்கே குழிகளை தோண்டுவதாலும், பின்னர் அவற்றை சரியாக மூடாமல் விடுவதாலும் பல சாலைகள் அணு குண்டு விழுந்த இடத்தில் ஏற்படும் பள்ளம் போல சாலைகள் இருக்கின்றன. இதனால் இந்த சாலைகளை எல்லாம் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் உள்ளதால், அதற்குள் ஒரு பெரிய அளவில் பணத்தை சுருட்டுவதற்காக சாலை போடுவதாக கணக்கு காட்டி கொள்ளையில் ஈடுபட அதிகாரிகள் அனுமதிக்காமல், நேர்மையான முறையில் இனி வரும் காலங்களிலாவது சாலைகளை அமைக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே சென்னையில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் நகரின் உட்பகுதியில் உள்ள விரைந்து சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Motorists ,season ,roads ,Chennai , Rainy season, Chennai, motorists
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு