×

எந்த நிபந்தனையும் இல்லாமல் முதல்வர் வேட்பாளர் அறிவிக்க வேண்டும்; எடப்பாடி பழனிசாமி முடிவால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி: அதிமுகவில் கோஷ்டி மோதல் முடிவுக்கு வருவதில் சிக்கல்

சென்னை: எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி வருவதால், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், அதிமுகவில் கோஷ்டி மோதல் முடிவுக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருவதற்கு இன்னும் 6 மாதங்களே உள்ளது. அதன்படி வருகிற 2021ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தமிழக அரசியல் கட்சிகளும், இன்னும் ஒரு சில மாதங்களில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரசாரங்களை தொடங்கி விடுவார்கள்.

தமிழகத்தில் அதிமுக கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகளுடன் மீண்டும் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதால், இப்போதே அதிமுக கூட்டணி கட்சியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் தற்போது குரல் எழுப்ப தொடங்கியுள்ளனர். அதே நேரம், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் உள்ள ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். அதனால் அவரையே முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர்.

இதனால் அதிமுகவில் தற்போது உச்சக்கட்ட கோஷ்டி மோதல் எழுந்துள்ளது. இந்த பிரச்னை கடந்த 28ம் ேததி சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்திலும் பகிரங்கமாக வெடித்தது. செயற்குழு கூட்டத்திலேயே முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் வலியுறுத்தி பேசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், ”2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்க வேண்டும். அந்த குழு தான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும்” என்று பேசினார்.

இதனால் முதல்வர் எடப்பாடிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே செயற்குழு கூட்டத்திலேயே நேரடியாக மோதல் ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வருகிற 7ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இதே கட்சி தலைமை அலுவலகத்தில் வந்து கூட்டாக அறிவிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அதிமுக செயற்குழு கூட்டம் முடிந்து 6 நாட்கள் ஆகியும் முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசிக்கொள்ளவில்லை.

முதல்வர் எடப்பாடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சியை கூட ஓ.பன்னீர்செல்வம் புறக்கணித்து வருகிறார். கட்சியிலும், ஆட்சியிலும் இருவரும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிமுக மூத்த நிர்வாகிகள் கடந்த 5 நாட்களாக ஈடுபட்டு வந்தனர். ஆனாலும், ஓ.பன்னீர்செல்வம் தனது முடிவில் உறுதியாக இருப்பதால் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதியம் திடீரென சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளத்துக்கு சென்று விட்டார். அங்கு தனது ஆதரவாளர்களுடன் அவர் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வரும் 6ம் தேதி சென்னைக்கு வர வேண்டும் என்ற அறிவிப்பு அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் நேற்று வெளியானது. ஆனால், ஓபிஎஸ் தேனி புறப்பட்டு சென்றதும் அந்த அறிவிப்பை டுவிட்டர் பதிவில் இருந்து நீக்கி விட்டனர். இதுபற்றி விசாரித்தபோது, அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் தவறாக வெளியிடப்பட்டு விட்டது என்று கூறப்பட்டது. அதேநேரம், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு சமரச தீர்வை தற்போது முன்வைத்துள்ளனர். அதாவது, ”அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க தயார்.

அதே நேரம் அதிமுக கட்சியில், ஒருங்கிணைப்பாளரிடம் (ஓ.பன்னீர்செல்வத்திடம்) தான் இனி அனைத்து அதிகாரமும் இருக்க வேண்டும். அப்படி என்றால், வருகிற 7ம் தேதி முதல்வர் வேட்பாளராக உங்களை அறிவிக்க தயார்” என்று கூறப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த யோசனைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ”வருகின்ற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அறிவிக்க வேண்டும். கட்சியில் தற்போது அவர் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அந்த பதவியில் அவர் தொடர்ந்து செயல்படுவார்.

கட்சியில் எடுக்கும் அனைத்து முடிவுகளும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் சேர்ந்தே எடுக்க வேண்டும், அதில் இருவரின் கையெழுத்து கண்டிப்பாக இருக்க வேண்டும். அந்த பதவியை எக்காரணத்தை கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாது” என்று கூறி விட்டனர். இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுபோன்ற பிரச்னைகளால் அதிமுக உட்கட்சி மோதலுக்கு தீர்வு காண முடியாமல் மூத்த நிர்வாகிகள் திணறி வருகிறார்கள். இதனால் கடந்த 28ம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அறிவித்தபடி, வருகிற 7ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

காரணம், எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் நேருக்கு நேர் சந்தித்து பேசினால் மட்டுமே இந்த பிரச்னைக்கு ஒரு முடிவுக்கு வரும் என்று அதிமுக நிர்வாகிகள் கருதுகிறார்கள். ஆனால், இருவரும் ஆளுக்கு ஒரு பிரச்னையை முன் வைத்து, அதில் விடாப்பிடியாக உள்ளதால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிமுக நிர்வாகிகள் குழம்பி உள்ளனர். இதனால் அதிமுக தொண்டர்களும் கட்சி தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.

Tags : candidate ,Chief Ministerial ,supporters ,clash ,OPS ,Edappadi Palanisamy ,AIADMK , The Chief Ministerial candidate must declare without any conditions; OPS supporters shocked by Edappadi Palanisamy's decision: AIADMK has trouble ending factional clashes
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்