எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்த புதிய வேளாண் வரைவு சட்டம் தயார்: காங்கிரஸ் கட்சி வெளியிடுகிறது

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமல்படுத்த புதிய வேளாண் வரைவு சட்டத்தை காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ளது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பிற மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் உட்பட எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக புதிய வரைவு சட்டத்தை கொண்டு வர அதற்கான வரைவு சட்டத்தை காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ளது.

அந்த வரைவு சட்டம் அந்தந்த மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்படும் என்றும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை செயலற்றதாக்க மாதிரி சட்டத்தை காங்கிரஸ் உருவாக்கியுள்ளது. முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சமீபத்தில் தெரிவித்த கருத்தின்படி, காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில், மத்திய விவசாய சட்டங்களுக்கு எதிராக புதியதாக சட்டங்களை உருவாக்குவது குறித்து பரிசீலிக்கும்படி கேட்டுக் கொண்டார். அரசியலமைப்பின் 254 (ஏ) பிரிவின் கீழ் சட்டம் இயற்றப்படுவது குறித்து ஆராயுமாறு, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை காங்கிரஸ் தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.

மாநில சட்டமன்றங்களுக்கு உள்ள அதிகார வரம்புக்கு உட்பட்டு, மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டங்கள் இயற்றும் உரிமை மாநிலங்களுக்கு உண்டு என்று, அக்கட்சி கூறுகிறது. நாளை முதல் (அக். 4) பஞ்சாப் மற்றும் அரியானாவில் வேளாண் சட்டத்துக்கு எதிராக பேரணியை நடத்தும் காங்கிரஸ் கட்சி, இந்த மாதிரி வரைவு சட்டத்தின் விபரங்களை மக்களிடம் அறிவிக்க உள்ளது. இந்த பேரணியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார். மத்திய அரசின் வேளாண் சட்டத்தை காங்கிரஸ் மட்டுமின்றி திமுக, அகாலிதளம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி,

தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் மகாராஷ்டிராவில் ஆட்சியில் உள்ள சிவசேனா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு, மத்திய அரசின் வேளாண் சட்டத்தை மாநிலத்தில் அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>