×

தரமற்ற சிப்ஸ் விற்பனை செய்த சூப்பர் மார்கெட்டுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் : சென்னை நீதிமன்றம் உத்தரவு

சென்னை, :தரமற்ற சிப்ஸ் விற்பனை செய்த சூப்பர் மார்கெட்டுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த சென்னை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சம்மந்தப்பட்ட சூப்பர் மார்கெட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஸ்டோர் மேலாளருக்கு தலா 1 வாரம் சாதாரண சிறைத் தண்டனையும் விதித்துள்ளது.சென்னை பெரவள்ளூரில் உள்ள பிரபல சூப்பர் மார்கெட்டில் தரமற்ற சிப்ஸ் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, அந்த சூப்பர் மார்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடந்த 2018 ஆகஸ்ட் 7ம் தேதி திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு முரணாக தரமற்ற முறையில் பாக்கெட்டுகளில் சிப்ஸ் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிப்ஸ்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றின் மாதிரிகளை தஞ்சாவூரில் உள்ள உணவு பரிசோதனை மையத்திற்கு அனுப்பியதில் அந்த சிப்ஸ் தரமற்றது என்று தெரியவந்தது. இதையடுத்து, அந்த சூப்பர் மார்கெட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஸ்டோர் மேலாளர் ஆகியோர் மீது எழும்பூரில் உள்ள பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மாஜிஸ்திரேட் அருண் சபாபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சூப்பர் மார்கெட் தரப்பில் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், ஆவணங்களின் அடிப்படையிலும் ஆய்வறிக்கையின் அடிப்படையிலும் பார்க்கும்போது சூப்பர் மார்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்து சிப்ஸ் தரமற்றது என்று தெரியவந்துள்ளது. எனவே, சூப்பர் மார்கெட்டுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. சூப்பர் மார்கெட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஸ்டோர் மேலாளர் ஆகியோருக்கு தலா 1 வாரம் சாதாரண சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது. பறிமுதல்  செய்யயப்பட்ட சிப்ஸ் பாக்கெட்டுகளை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அழித்து அது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.



Tags : supermarket ,Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...