×

உ.பி-யில் இளம்பெண் பலாத்கார கொலை : ஹத்ராஸ் போலீஸ் எஸ்பி சஸ்பெண்ட்; உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு

லக்னோ:உத்தரபிரதேசத்தில் இளம்பெண் பலாத்கார கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், ஹத்ராஸ் போலீஸ் எஸ்பி உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, அவரது வீட்டிற்கு ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது நடந்த தள்ளுமுள்ளுவில் ராகுல் காந்தி கீழே விழுந்தார்.

இச்சம்பவத்தை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல், எதிர்கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
பெண் பலாத்கார கொலை சம்பவ வழக்கை விரைந்து நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அம்மாநில உள்துறை செயலர் பக்வான் ஸ்வரூப் தலைமையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைத்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்த இளம்பெண்ணின் உடற்கூறாய்வு அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

அதில், இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து தரப்பிலிருந்தும் வரும் அழுத்தம் காரணமாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஹத்ராஸ் மாவட்ட போலீஸ் எஸ்பி விக்ராந்த் வீர், இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் வர்மா, உதவி ஆய்வாளர் ஜாகவீர் சிங், தலைமைக் காவலர் மகேஷ் பால் ஆகிய நான்கு பேரை இடைநீக்கம் செய்துள்ளார்.
பெண்ணை எரித்த சம்பவம் தொடர்பான உண்மையைக் கண்டறிய இடைநீக்கம் செய்யப்பட்ட அலுவலர்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு அளித்த முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வால்மீகி கோயிலில் பிரியங்கா

ஹத்ராஸ் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் பெண்ணுக்கு நீதி வேண்டி டெல்லியில் உள்ள மகரிஷி வால்மீகி கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துடன் எப்போதும் நான் துணை நிற்பேன். இந்த சம்பவத்துக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்பி அரசாங்கத்துக்கு அழுத்தம் தர வேண்டும்’ என்றார்.

யோகியா? ரோகியா?

உத்தரபிரதேச இளம்பெண் பாலியல் கொலை சம்பவம் குறித்து, கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா உத்தரப் பிரதேச முதலமைச்சரை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘உத்தர பிரதேச அரசு சட்டம் ஒழுங்கை சரியாக கையாளவில்லை. அங்கு நடப்பது ஜனநாயக ஆட்சியா அல்லது ஹிட்லர் ஆட்சியா? அம்மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் தொடர தார்மீக உரிமை இல்லை. அவர் யோகியா அல்லது ரோகியா (நோயாளி) என்று எனக்கு தெரியவில்லை’ என்று குற்றம்சாட்டினார்.

Tags : Rape murder ,Hadras Police SP ,UP ,
× RELATED குட்டி ஜப்பான் சிவகாசியில் பள்ளி, கல்லூரி நோட்டுகள் தயாரிப்பு பணி ஜரூர்