×

நவீன கழிப்பறை உட்பட 8,000 பவுண்டுகள் எடை உள்ள பொருட்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம்!!

வாஷிங்டன் : சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களுடன் நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம், அன்டரேஸ் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

நாசாவின் கல்பனா சாவ்லா விண்கலம்

வான்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான பொருட்களை சுமந்து செல்வதற்காக பிரத்யேக விண்கலங்கள் உள்ளன.இதை வர்த்தக ரீதியாகக் கையாண்டு வரும் ‘நார்த்ராப் க்ருமன்’ என்ற அமெரிக்க நிறுவனம், தனது புதிய விண்கலத்துக்கு, ‘எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா’ என்று பெயர் சூட்டியுள்ளது. இது குறித்து  இந்த நிறுவனம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘விண்வெளி ஆய்வில் கல்பனா சாவ்லா செய்த பங்களிப்பையும், தியாகத்தையும் கவுரவிக்கும் விதமாக, ‘என்ஜி-14’ என்ற விண்கலத்துக்கு ‘எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.’ என கூறப்பட்டுள்ளது.

புதிய விண்கலத்தில் என்ன சிறப்பு?
* எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா விண்கலமானது செவ்வாய் கிரக ஆய்வுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.
* 3,629 கிலோ எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த விண்கலத்தை வியாழக்கிழமை இரவு விண்ணில் செலுத்தும் பணி தொடங்கியது. விர்ஜினியாவின் வாலோப்ஸ் தீவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்வெளி பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான நார்த்ரூப் கிரம்மானின் அன்டரேஸ் ராக்கெட், விண்கலத்தை சுமந்துகொண்டு புறப்பட தயாரானது. ஆனால், கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு அமைப்பில் திடீரென கோளாறு கண்டறியப்பட்டது. இதனால் ராக்கெட் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்ட நிலையில், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு விண்கலம் ஏவப்பட்டது.

9 நிமிடத்தில் ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி பயணித்தது. திங்கட்கிழமை அதிகாலை விண்வெளி நிலையத்தை சென்றடையும்.விண்வெளியில் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நவீன கழிப்பறை, விர்ச்சுவல் கேமரா, கம்ப்யூட்டர் சாதனங்கள், பரிசோதனைக் கருவிகள் என 8,000 பவுண்டுகள் எடை உள்ள பொருட்கள் இந்த விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த விண்கலம் டிசம்பர் மாதம் வரை விண்வெளி நிலையத்தில் இருக்க திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் மாத மத்தியில் அங்கிருந்து புறப்பட்டு பூமிக்கு திரும்பும்.

Tags : Kalpana Chawla ,NASA ,International Space Station , Modern Toilet, Weight, Materials, International Space Station, NASA, Kalpana Chawla, Spacecraft
× RELATED வானிலை நிலவரங்களை துல்லியமாக...