×

மதுரையில் கிசான் திட்டத்தில் முறைகேடு வேளாண் துறையில் 62 ஊழியர்கள் இடமாற்றம்

மதுரை,: மதுரையில் கிசான் திட்ட முறைகேடு விவகாரம் தொடர்பாக, வேளாண்மைத்துறையில் 62 பணியாளர்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர்  உத்தரவிட்டுள்ளார்.  பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு, மத்திய அரசால் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளில் ஆண்டுக்கு ரூ.6  ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இந்தாண்டு பெரும் மோசடி நடந்துள்ளது கண்டறியப்பட்டது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி.  விசாரணை நடந்து வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்டதாக  16 பேரின் பட்டியலை, மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகானந்தன்,  சிபிசிஐடி போலீசாரிடம் கொடுத்தார். இவரது புகாரின் அடிப்படையில், வேளாண்மைத்துறையின் மாவட்ட இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி  இயக்குநர், வேளாண் அலுவலர் என நேற்று விசாரணை நடந்தது.

விசாரணையில், போலியாக 13,077  பேர் தகுதியற்ற நபர்கள்  என தெரியவந்தது.  முறைகேடு எதிரோலியாக மாவட்ட வேளாண்மைத்துறையில் அட்மா திட்டத்தில் பணியாற்றும், உதவி மேலாளர், வட்டார தொழில் நுட்ப அதிகாரிகள்,  கணினி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட  62 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,
கள்ளக்குறிச்சி, மதுரையில் 3 பேர் கைது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் உதவி இயக்குனர்கள் 2 பேர் மற்றும் அட்மா திட்டத்தின் கீழ்  பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர்கள் 18 பேர் என மொத்தம் 20 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தற்போது, ரிஷிவந்தியம் வட்டார வேளாண்  அலுவலகத்தில் உதவி தொழில்நுட்ப மேலாளராக பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர் ராஜீவ்காந்தி (34) என்பவரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது  செய்தனர். இதேபோல், மதுரை மாவட்டத்தில் முறைகேட்டில் தொடர்புடைய பேரையூரை சேர்ந்த விஸ்வநாதன், உசிலம்பட்டி வட்டார வேளாண்மை  அலுவலகத்தில் உதவி தொழில் நுட்ப பொறியாளரான சாக்ரடீஸ் பாண்டி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர்.



Tags : Madurai , Abuse in Kisan project in Madurai Transfer of 62 employees in the agricultural sector
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...