காதலை கைவிடாததால் ஆத்திரம் வாலிபர் சரமாரி வெட்டி படுகொலை

திருப்போரூர்.: கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம், அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (எ) குள்ள சுரேஷ் (27). ஆட்டோ ஓட்டி  வந்தார். பின்னர், ஊரடங்கு காலத்தில் கட்டிட வேலை செய்து வந்தார்.சுரேஷ்குமாரும், அதே பகுதியை சேர்ந்த உறவினர் பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்தனர். இவர்களது காதல் விவகாரம், இளம்பெண்ணின்  குடும்பத்தினருக்கு தெரிந்தது. சுரேஷ்குமார் மீது கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் சில வழக்குகள் உள்ளதால், பெண் கொடுக்க மறுத்தனர்.ஆனாலும், அவர்களது காதல் தொடர்ந்தது,  அப்பெண்ணும் சுரேஷ்குமாரை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய மாட்டேன் என அடம் பிடித்தார்.

இளம்பெண்ணின் அக்கா, திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பத்தில் வசிக்கிறார். அவர்கள், சுரேஷ்குமாரை தீர்த்து கட்டினால் மட்டுமே இவர்களின்  காதலுக்கு முடிவு கட்ட முடியும் என திட்டமிட்டனர்.இதையடுத்து நேற்று முன்தினம் மாலை சுரேஷ்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டனர்.அப்போது, தனது நண்பரின் பிறந்தநாள் விழாவுக்கு,  அவரை அழைத்தனர். அவரும், இரவு 8 மணியளவில் நெல்லிக்குப்பம் பகுதிக்கு சென்றார்.நெல்லிக்குப்பம் - அகரம் சாலையில் உள்ள வனப்பகுதியில் பிறந்தநாள் விழா நடப்பதாக கூறி அழைத்து சென்று கேக் வெட்டினர். பின்னர்  அனைவரும் மது அருந்தினர். அப்போது இளம்பெண் மீதான காதலைக் கைவிட வேண்டும்  என சிலர் எச்சரித்துள்ளனர்.

அதற்கு, சுரேஷ்குமார் உயிரே போனாலும் காதலை விட மாட்டேன் என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள், பீர் பாட்டிலால்  சுரேஷ்குமாரின் தலையில் சரமாரியாக தாக்கினர். பின்னர், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுரேஷ்குமாரின் தலை, முகம், கழுத்து உள்பட உடல்  முழுவதும் சரமாரியாக  வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.பிறந்தநாள் விழாவுக்கு சென்ற ஒருவர் கொடுத்த தகவலின்பேரில், சுரேஷ்குமாரின் தாய் விஜயா கூடுவாஞ்சேரி போலீசில் புகார் தெரிவித்தார்.  அதன்பேரில் கூடுவாஞ்சேரி, காயார், திருப்போரூர் போலீசார் திருப்போரூர் அருகே நெல்லிக்குப்பம் காட்டுப்பகுதியில் சுரேஷ்குமாரின் சடலம் முகம்  சிதைக்கப்பட்ட நிலையில் கிடப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, காயார் எஸ்ஐ சுசீலா மற்றும் போலீசார், சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு  மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 5 பேரை பிடித்து தீவிரமாக  விசாரிக்கின்றனர்.மேலும், நெல்லிக்குப்பத்தில் வசிக்கும் இளம்பெண்ணின் அக்கா, மாமா ஆகியோரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories:

>