×

விவசாயிகளுடன் ஆலோசிக்காமல் நண்பர்களுடன் மட்டுமே பேசிவிட்டு வேளாண் சட்டத்தை இயற்றியுள்ளார்: மோடி மீது சோனியா குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘‘மகாத்மாவின் வழியில் அமைதியாகப் போராடும் விவசாயிகளின் நோக்கம் வெற்றியடையும்,’’ என்று சோனியா காந்தி  தெரிவித்துள்ளார். காத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வீடியோ பதிவை  வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, விவசாயிகள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் மகாத்மா காந்தி. இந்தியாவின் ஆத்மா கிராமங்களில் உள்ளது  என்றார். அந்த விவசாயிகள் இன்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். வியர்வை சிந்தி நாட்டுக்காக உணவு உற்பத்தி செய்பவர்களின் கண்களில், மோடி  அரசு ரத்தத்தை வரவழைத்து விட்டது.

காங்கிரஸ் அரசு எப்போதுமே மக்களின் நலனை முன்னிறுத்தியே சட்டங்களைக் கொண்டு வந்தது. ஒவ்வொரு முடிவும் சாதாரண மனிதர்களை  மனதில் கொண்டே எடுக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம். ஆனால், மோடி அரசுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. விவசாயிகளுக்கான  சட்டம் என்று சொல்லிக் கொண்டு விவசாயிகளை கலந்து ஆலோசிக்கவில்லை. தனது நண்பர்களுடன் மட்டும் பேசி முடிவு எடுத்துவிட்டு சட்டம்  இயற்றி இருக்கிறார். ஊரடங்கு காலத்தில் இலவச உணவு தானியத்தை கொடுக்குமாறு பெரும்பாலான மக்கள் கேட்டனர். விவசாய சகோதரர்கள் உற்பத்தி செய்யாவிட்டால்  அரசால் அது சாத்தியப்பட்டிருக்குமா? விவசாயிகளின் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கவில்லை. அதனால், அவர்கள் தெருக்களில் இறங்கி  போராட நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஆனாலும், மகாத்மாவின் வழியில் அமைதியுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் உற்பத்திப்  பொருட்களுக்கான நியாயமான விலையை மட்டுமே அவர்கள் கேட்கிறார்கள்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் தொடர்ந்து நடத்தும். இன்று நமது கட்சியினர் விவசாயிகளுக்கு ஆதரவாக எல்லா  இடங்களிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன். விவசாயிகளும், காங்கிரஸ் கட்சியினரும் இந்த போராட்டத்தில்  வெற்றி பெறுவார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். விவசாயிகளின் குரல் நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கவில்லை. அதனால், அவர்கள் தெருக்களில் இறங்கி போராட நிர்ப்பந்தப்படுத்தப்பட்டு  இருக்கிறார்கள்.



Tags : Sonia ,Modi , Without consulting with farmers Only talking to friends Has passed agriculture law: Sonia blames Modi
× RELATED இந்தியாவின் ஜனநாயகத்தின்...